Published : 17 Nov 2020 09:57 AM
Last Updated : 17 Nov 2020 09:57 AM

‘‘உட்கட்சி விவகாரங்களை ஊடகங்களில் விவாதிப்பதா?- தொண்டர்களை காயப்படுத்தியுள்ளது’’ - கபில்சிபலுக்கு கெலோட் கடும் கண்டனம்

ஜெய்ப்பூர்

காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்களை ஊடங்களில் விவாதிப்பது முறையல்ல, இது காங்கிரஸ் தொண்டர்களை காயப்படுத்தி விட்டதாக மூத்த தலைவர் கபில்சிபலுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்றதைவிட இந்த முறை காங்கிரஸ் நிலைமை மோசமானது.

அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து மூத்த தலைவர் கபில் சிபல் ஒரு ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், “காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. நம்மிடம்தான் பதில் இருக்கிறது. துணிச்சலுடன், விருப்பத்துடன் நாம் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக உள்ளன என்று நம்புகிறார்கள். இயல்பில் உள்ள சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும். பிஹார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், இந்த தேசத்தின் மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

கபில்சிபலின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கபில் சிபலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘காங்கிரஸ் எத்தனையோ தேர்தல்களை கண்டுள்ளது. ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றியும், தோல்வியும் வரக்கூடியது தான். பல மோசமான தோல்வியை கண்டபிறகு மீண்டும் எழுந்து நின்ற வரலாறுகள் உண்டும். நான்குமுறை இதுபோன்று காங்கிரஸ் மீண்டெழுந்தது. ஆனால் காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்களை ஊடங்களில் விவாதிப்பது முறையல்ல. கபில்சிபல் இதுபோன்று பொது வெளியில் கட்சியின் உள் விவகாரங்களை விவாதிப்பது முறையல்ல. இது காங்கிரஸ் தொண்டர்களை காயப்படுத்தி விட்டது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x