

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைக் கைவிட்டு தனது நாட்டு மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைக் கைவிட்டு , தீவிரவாதத்தைப் பரப்புவதை நிறுத்தி தனது நாட்டு மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். பெருமைமிக்க ஈரானியர்கள் அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராக குரல் எழுப்பியதைக் கடந்த மாதங்களில் நாம் கண்டோம். ஏனென்றால் நமது சக்தி வாய்ந்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
நாம் இது தொடர்பாக குறுகிய காலத்தில் அவர்களுக்குச் சிறந்த உதவிகளை அளிக்க முடியும். நாம் இங்குதான் இருக்கிறோம். அவர்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். முடிவு முற்றிலும் அவர்களிடம் உள்ளது” என்றார்.
முன்னதாக, ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் அரசின் இந்த முடிவை ஈரான் மதத் தலைவர் அயத்தெல்லா காமெனியும் ஆதரித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் போராட்டம் வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 200 பேர் வரை பலியாகினர். இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!