

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, திருமண விழாவொன்றில் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் கடந்த 2 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று (பிப்.5) காலை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவின் நகர ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரான ஜெயராமனின் மகன் திருமண விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையேற்று இந்த சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார்.
இத்திருமண நிகழ்வில் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இத்திருமண விழாவின்போது குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கும் கையெழுத்து இயக்கத்திற்கான நோக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களிடம் விளக்கினார். இதனையடுத்து மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கையெழுத்திட்டனர்.
தொடர்புடைய செய்திகள்