

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ராமஜென்மபூமி தீர்த்த ஷேச்ரா என்று அமைப்புக்குப் பெயரிடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி மக்களவையில் அறிவித்தார்.
நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த உச்ச நீதிமன்றம், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த அறக்கட்டளை வசம் 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப் பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அயோத்தி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பிரதமர் மோடி பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளபடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 3 மாதங்களில் அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவின்படி ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு விரிவான திட்டங்களை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இதன்படி 67.77 ஏக்கர் நிலம் முழுவதும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முஸ்லிம்களுக்குத் தேவையான 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திடம் வழங்கப்படும். இந்த நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்கும்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தவறவிடாதீர்கள்.........