Published : 29 Aug 2015 02:57 PM
Last Updated : 29 Aug 2015 02:57 PM

அமைதிப் பேச்சு வார்த்தைகள் முயற்சியை முறியடிப்பது இந்தியாதான்: பாக். குற்றச்சாட்டு

இருதரப்பு பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சினையை இடம்பெறச் செய்ய விடாமல் தடுத்து பிராந்திய பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் அமைதி முயற்சிகளையும் இந்தியா சீர்குலைப்பதாக பாகிஸ்தான் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற தெளிவான பார்வை பாகிஸ்தானுக்கு உள்ளது. அதேபோல் அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணி பாதுகாத்து வருகிறது, எனினும் துரதிருஷ்டவசமாக இந்தியாவிடம் இருந்து இதற்கு உகந்த நடவடிக்கை ஏதும் வரவில்லை.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதை இந்திய அரசு தடுப்பதை நியாயப்படுத்திட முடியாது.

ஏதோ ஒருவகையில் அமைதி முயற்சிகளை தடுத்து நிறுத்தி பிராந்திய பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் இந்தியா சீர்குலைக்க முயற்சிக்கிறது.

இருநாடுகளுக்கும் இடையே உறவு சீரடைவதற்கும் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படவும் பெரிய குறுக்கீடாக இருப்பது காஷ்மீர் பிரச்சினைதான்.

காஷ்மீர் பிரச்சினை பற்றி விவாதிக்காமல் பேச்சுவார்த்தை ஏற்பாடு அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது என்பதை இந்தியா உணர வேண்டும். இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் தொடரும் அதேவேளையில் எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்தையும் பாகிஸ்தான் ஏற்காது என்று தெரிவித்துள்ளார் கான்.

இதனிடையே, லண்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் பிலிப் ஹமாண்டுடன், கான் பேச்சு நடத்தினார்.

பாகிஸ்தான் தேசியபாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரும் டெல்லியில் சந்தித்துபேச இருந்தனர். அதற்கு முன்னதாக காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களை அழைத்து சர்தாஜ் ஆஜிஸுடன் சந்தித்துப்பேசி கருத்தறிய பாகிஸ்தான் தூதர் நடவடிக்கை எடுத்தார். ஆனால் பிரிவினைவாத தலைவர்களை அழைத்து பேசுவது ஏற்க முடியாது என்று இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. இருதரப்பும் தமது நிலையில் பிடிவாதமாக இருந்ததால் பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சு ரத்தானது.

அதே நேரத்தில் சமீபகாலமாக எல்லையில் முக்கியமாக ஜம்மு பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதையும் பாகிஸ்தான் சமீபகாலத்தில் அதிகப்படுத்தியுள்ளது. அவர்கள் பாதுகாப்புப் படையினர் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீர் எல்லையில் இதுவரை இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் அனுப்பிய இரு தீவிரவாதிகளை இந்தியா உயிருடன் பிடித்து அந்நாட்டின் கோழைத்தனமான நடவடிக்கையை அம்பலப்படுத்தியுள்ளது. எனினும் இந்தியாவுக்கு தீவிரவாதிகளை அனுப்பவில்லை என்று பாகிஸ்தான் கூறிவருகிறது.

இது மட்டும் இல்லாமல் பாகிஸ்தானுக்கு ஒரே அச்சுறுத்தல் இந்தியா மட்டும்தான் என்று கூறி அதனை சமாளிப்பது எப்படி என்பது குறித்து சமீபத்தில் பாகிஸ்தான் அரசு ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x