செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 14:33 pm

Updated : : 11 Sep 2019 14:44 pm

 

ஆப்கன் அமெரிக்க தூதரகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 'இரட்டை கோபுரத் தாக்குதல்' நினைவு தின அனுசரிப்பின்போது அதிர்ச்சி

blast-at-us-embassy-in-afghanistan-on-9-11-anniversary
காபூலில் அமெரிக்கத் தூதரகம் அருகே வெடிகுண்டுத் தாக்குதலில் புகை பரவியக் காட்சி | படம்: ட்விட்டர்

காபூல்

ஆப்கனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை.

செப்டம்பர் 11, 2001-ல் நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தில் அல்கொய்தா நடத்திய தாக்குதல்களின் 18-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இக்கோர சம்பவம் நடந்த 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு 18 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆப்கானிஸ்தான் மக்களும் தங்கள் சொந்த நாட்டில் அமெரிக்கப் படைகளுக்கும் தலிபான் படைகளுக்கும் நேட்டோ படைகளுக்கும் நடுவே சிக்கி நிம்மதியை இழந்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம், தலிபான் தீவிரவாதிகளின் இரண்டு கார் குண்டுகள் சர்வதேச நேட்டோ மிஷனின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட பலரைக் கொன்றன. அந்தத் தாக்குதல்கள் பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ''அதில் ஒரு அமெரிக்க சிப்பாயும் இறந்தார், அதோடு அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தையும் இறந்தது'' என்றார்.

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியதால் அவர்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டதாக கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மேலும், டிரம்ப்பின் கருத்துகளைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதாக சில தினங்களுக்குமுன் தலிபான்கள் உறுதியேற்றனர்.

நேற்று நள்ளிரவு நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சின்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:

''அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 18-வது நினைவு தினம் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே, தூதரகத்தின் வெகு அருகில் வான்வழித் தாக்குதல் வழியாக சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.

அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தின் கட்டிடத்திற்கு அருகில் பல தூதரகங்கள் அமைந்துள்ள இடத்தில் புகை பெருகுவதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின.

ராக்கெட் தாக்குதல் மூலம் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாகவும், குண்டுவெடிப்புக்குப் பின்னர் அமெரிக்கத் தூதரகம் ஓர் எச்சரிக்கை அலாரத்தை அலறச் செய்ததை அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேட்க முடிந்ததாகவும் உள்ளூர் நிருபர் ஒருவர் தெரிவித்தார்.

காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் விபத்து எதுவும் ஏற்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிக்கையும் இதுவரை இல்லை என்றாலும் ஆனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. மேலும் விவரங்களுக்கு எந்த அரசாங்க அதிகாரியையும் அணுக முடியவில்லை,

அமெரிக்கா தலிபான்களுக்கிடையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீடித்துவரும் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென அமெரிக்க-தலிபான் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திய பின்னர் ஆப்கானிஸ்தான் தலைநகரில் நடந்த முதல் பெரிய தாக்குதல் இதுவாகும்''.

இவ்வாறு சின்குவா தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் ஜாபிஹுல்லா முஜாஹித் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியின்போது, ''தலிபான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பிலிருந்தும் உயர் மட்ட அதிகாரிகள் முன்னிலை வகிக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு வாஷிங்டன் பின்வாங்குவது வருத்தம் அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர எங்களுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று ஜிஹாத் மற்றும் சண்டை, மற்றொன்று பேச்சுவார்த்தைகள்.

ஒருவேளை, ட்ரம்ப் பேச்சுவார்த்தைகளை நிறுத்த விரும்பினால், மேலே குறிப்பிட்ட இரண்டு வழிகளில் முதல் வழியை நாங்கள் முன்னெடுப்போம், அதற்காக அவர்கள் விரைவில் வருத்தப்பட நேரிடும்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

9/11இரட்டைக் கோபுரத் தாக்குதல்அமெரிக்காவில் அல்கொய்தா தாக்குதல்9/11 தாக்குதல் சம்பவம்9/11 நினைவுதின அனுசரிப்புஅமெரிக்கத் தூதரகம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author