Published : 14 May 2015 10:38 AM
Last Updated : 14 May 2015 10:38 AM

உலக மசாலா: கரப்பான் பூச்சி கேம் ஷோ

ஜப்பானில் கரப்பான் பூச்சி கேம் ஷோ மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு நீண்ட கண்ணாடிக் குழாயின் நடுவே கரப்பான் பூச்சியை வைத்து விடுகிறார்கள். குழாயின் இரண்டு பக்கங்களிலும் போட்டியாளர்கள் அமர்ந்துகொள்ள வேண்டும். குழாயில் வாய் வைத்து ஊத வேண்டும்.

ஊதும்போது கரப்பான் பூச்சி நகர்ந்து, எதிராளியின் வாய்க்குள் சென்றால் ஒரு பாயிண்ட். இந்த கேம் ஷோவில் ஒரு நடுவர் இருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் யார் அதிக முறை வாய்க்குள் கரப்பானைத் தள்ளுகிறாரோ, அவருக்கே வெற்றி. பரிசுத் தொகை அதிகம் என்பதால் பங்கேற்பதற்கு வரிசையில் காத்திருக்கிறார்கள். இணையதளத்தில் வெளியான கரப்பான் போட்டி வீடியோவை இதுவரை 1 கோடியே 65 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்!

ம்… இதெல்லாம் ஒரு போட்டி… இதுக்குப் பரிசு வேறு…

ஜப்பானில் வசிக்கிறார் ஷின்ரி டெஸுகா. இவர் லாலிபாப்களில் விதவிதமான உருவங்களைச் செய்யக்கூடிய கலைஞர். `அமெஸைகு’ என்பது ஜப்பானின் பழங்காலக் கலைகளில் ஒன்று. மிட்டாய்களில் மீன், தவளை, சிங்கம், புலி என்று விதவிதமான உருவங்களை மிக நேர்த்தியாகச் செய்யக்கூடிய கலை. இந்தக் கலையைச் சொந்த முயற்சியில் கற்றுக்கொண்டார் டெஸுகா. டோக்கியோவில் சிறிய கடை ஒன்றை வைத்து, லாலிபாப்களை விற்று வருகிறார். ஜப்பானிலேயே இரண்டே இடங்களில்தான் அமெஸைகு லாலிபாப்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வாடிக்கையாளர் கண் முன்பே லாலிபாப்களை உருவாக்கித் தருகிறார் டெஸுகா. சர்க்கரைப்பாகை 90 டிகிரியில் சூடுபடுத்தி, 3 நிமிடங்களில் மோல்ட்களில் ஊற்றி உறைய வைக்கிறார். பிறகு கத்தியால் அழகாகச் செதுக்கி, தேவையற்ற பகுதிகளை நீக்குகிறார். மிட்டாய் நன்றாகக் கட்டியான பிறகு, இயற்கை நிறங்களை அதன் மீது ஊற்றிக் காய வைத்து, அழகான லாலிபாப்களைக் கையில் கொடுத்துவிடுகிறார்.

இதுபோன்ற லாலிபாப்களைச் செய்வது மிகவும் கடினமான காரியம். தங்கமீன், தவளை, தலைப்பிரட்டை, பறவை, ஒட்டகச்சிவிங்கி, பாம்பு, புராணக் கதைகளில் வரும் விலங்குகள் என்று ஏராளமான உருவங்களைச் செய்து அசத்திவிடுகிறார் டெஸுகா. 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஒரு லாலிபாப் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பழங்காலக் கலையைப் பாதுகாக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார்.

இவ்வளவு அழகாக இருந்தால் எப்படிச் சாப்பிடத் தோன்றும் டெஸுகா?

தைவானைச் சேர்ந்தவர் 47 வயது அஹ் ஜி. கடந்த 20 ஆண்டுகளாக தைனான் ரயில் நிலையத்தில் தன்னுடைய காதலிக்காகக் காத்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ஜியின் காதலி, ரயில் நிலையத்தில் காத்திருங்கள், சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் அவர் வரவேயில்லை. அந்தப் பெண்ணின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு ஜி இன்று வரை காத்திருக்கிறார்.

வீட்டுக்கோ, வேலைக்கோ செல்வதில்லை. யாராவது பரிதாபப்பட்டு உணவு கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுகிறார். உறவினர்கள் அடிக்கடி வந்து உடைகளையும் பணத்தையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களிடம் சகஜமாகப் பேசுவார், பழகுவார். ஆனால் வீட்டுக்குக் கூப்பிட்டால் மட்டும் செல்லவே மாட்டார். ஒருமுறை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கிருந்து தப்பித்து, ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார் ஜி. “ஒருவேளை நான் இங்கு இல்லாதபோது அந்தப் பெண் வந்தால் ஏமாற்றம் அடைந்துவிடுவார். அதற்காகவே நான் இங்கு காத்திருக்கிறேன்’’ என்கிறார் ஜி. முடிவெட்டுதல், மருத்துவ உதவி, உணவு என்று யாராவது உதவி செய்துகொண்டே இருப்பதால் காத்திருப்பதில் கஷ்டம் ஒன்றும் இல்லை என்கிறார் ஜி.

ஐயோ… ஒரு வார்த்தைக்காக காலம் முழுவதும் காத்திருக்கீங்களே… நீங்க ரொம்பப் பாவம் ஜி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x