Published : 04 Dec 2014 10:23 AM
Last Updated : 04 Dec 2014 10:23 AM

உலக மசாலா: ஸ்கைப் மூலம் மன்னர் ஆட்சி

ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டின் ஒரு பகுதி ஹோஹோய். இந்தப் பகுதியின் மன்னர் கோசி பன்சா. இவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆனால் ஸ்கைப் மூலம் ஹோஹோய் பகுதியை ஆட்சி செய்து வருகிறார். 66 வயது பன்சா, நீண்ட காலங்களுக்கு முன்பு ஜெர்மனி வந்தபோது, அந்த நாடு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அங்கேயே தங்கிவிட்டார். 1987ம் ஆண்டு தாத்தா இறந்த பிறகு, ஆட்சிப் பொறுப்பை பன்சா ஏற்க வேண்டிய சூழல் உருவானது.

தன்னை நம்பியிருக்கும் 2 லட்சம் மக்களைக் காக்கும் பொறுப்பு பன்சாவுக்கு வந்து சேர்ந்தது. அதற்காக அவருக்கு ஜெர்மனியை விட்டுச் செல்ல மனமில்லை. ஜெர்மானிய பெண்ணைத்தான் திருமணம் செய்து, வாழ்க்கை நடத்தி வருகிறார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஜெர்மனியிலிருந்தே ஆட்சி செய்துவருகிறார் பன்சா. ஆண்டுக்கு 6 முறை ஹோஹோய் சென்று, நாட்டைக் கவனித்து வருகிறார். ஜெர்மனியில் சாதாரண உடையில் இருப்பவர், சொந்த நாட்டில் பாரம்பரிய மன்னர் உடையில் காட்சியளிப்பார்.

இப்படியும் கூட மன்னர் ஆட்சியெல்லாம் இருக்குது…!

நியூயார்க்கைச் சேர்ந்த ஆண்ட்ரே மெக்டோனெல், தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பை நிறைய ஷூக்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். சாலைகளில் பார்க்கும் ஏழை எளிய மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற ஷூக்களை வழங்குகிறார். 40 வயது ஆண்ட்ரே கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் ஜோடி ஷூக்களை ஏழைகளுக்கு வழங்கியிருக்கிறார். தெரிந்தவர்களிடம் சென்று ஷூக்களைச் சேகரிக்கிறார் ஆண்ட்ரே.

ஷூக்கள் கொடுப்பவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதை இணையத்தில் ஏற்றிவிடுகிறார். சேகரித்த ஷூக்களைச் சுத்தம் செய்கிறார். மோசமான பகுதிகளை நீக்கி, புதிய பகுதிகளைச் சேர்க்கிறார். புத்தம் புதிய பொலிவோடு காட்சி தரும் ஷூக்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். வெறும் கால்களில் நடப்பவர்களுக்குத்தான் ஷூக்களைப் பற்றிய அருமை தெரியும். பசியோடு இருக்கும் ஏழைகளின் துயரை என்னால் முற்றிலும் போக்குவதற்கு போதிய பணம் இல்லை. அவர்களின் துயரங்களில் ஒரு சிறிய பகுதியையாவது போக்கவேண்டும் என்ற காரணத்தாலேயே ஷூக்களைத் தேடிச் செல்கிறேன் என்கிறார் ஆண்ட்ரே.

சக மனிதர்களின் துயரத்தைப் போக்க நீங்க எடுத்திருக்கிற முயற்சிக்கு ஒரு பூங்கொத்து ஆண்ட்ரே!

கைகளில் பிரேஸ்லெட் அணிந்துகொண்டால், உங்களின் கெட்ட பழக்கங்கள் காணாமல் போகும் என்றால் நம்ப முடிகிறதா? பாவ்லோக் என்ற கைப்பட்டை கெட்ட பழக்கங்களிலிருந்து உங்களை விடுவிக்கிறது. இணையதளங்களில் அமர்ந்து அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்றால், கையில் அணிந்துள்ள இந்தக் கைப்பட்டை மின்சாரத்தைச் செலுத்தி அதிர்ச்சியைக் கொடுக்கும். அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் இணையதளங்களில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தால், மேலும் மேலும் ஷாக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒருகட்டத்தில் இணையதளத்தை விட்டு வெளியே வந்துவிடுவீர்கள். அதேபோல கட்டுப்பாடு இன்றி உணவுகளைச் சாப்பிட்டாலும் இந்தக் கைப்பட்டை ஷாக் கொடுக்கும். இதன் மூலம் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும் வழக்கம் குறைந்து, உங்கள் உடல் ஆரோக்கியமாக மாறும். அதிக நேரம் தூங்கினாலும் கைப்பட்டை எழுப்பிவிடும். பாவ்லோக் கைப்பட்டைகள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கின்றன!

மனுசன் கண்டுபிடிச்ச விஷயத்துக்கு அவனே அடிமையாகி, அதிலிருந்து மீட்டெடுக்க இன்னொரு விஷயத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு…!

அரிய சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவது வழக்கம். கின்னஸ் வெளியிடும் ஆண்டு புத்தகத்தையும் கின்னஸ் வெளியிட்ட பொம்மைகள், பிரசுரங்கள், சிறிய புத்தகங்கள், நினைவுப் பரிசுகள் போன்றவற்றையும் சேகரித்து ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் மார்டின் டோவே. 57 வயது மார்டின் கடந்த 40 ஆண்டுகளாக இந்தச் சேகரிப்பைச் செய்து வருகிறார்.

17 வயதில் கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு கின்னஸ் புத்தகம் அவருக்குக் கிடைத்தது. அது அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. பழைய புத்தகங்களைத் தேடி வாங்கினார். புதிய புத்தகங்களையும் பொருள்களையும் சேகரிக்க ஆரம்பித்தார். இன்று 353 கின்னஸ் புத்தகங்களும் 2,164 நினைவுப் பொருள்களும் அவரிடம் இருக்கின்றன. மார்டினின் சாதனையை வியந்து, பட்டம் கொடுத்துப் பாராட்டியிருக்கிறது கின்னஸ்.

கின்னஸுக்கே கின்னஸா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x