Last Updated : 20 Jul, 2017 09:23 AM

 

Published : 20 Jul 2017 09:23 AM
Last Updated : 20 Jul 2017 09:23 AM

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு: இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் - அமெரிக்க ராணுவத்துக்கு செனட் குழு பரிந்துரை

இந்தியா - அமெரிக்கா இடையே யான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டமிட்டபடி வளரவில்லை என அமெரிக்க நாடாளுமன்ற செனட் குழு கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம் இது விஷயத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்த நிதி யாண்டுக்கான (2018) பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, வருடாந்திர தேசிய பாதுகாப்பு ஒப்புதல் சட்ட (என்டிஏஏ) 2018 மசோதாவுக்கு பிரதிநிதிகள் சபை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், செனட் சபையும் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்நிலையில், ஜான் மெக் கெய்ன் தலைமையிலான செனட் நிலைக்குழு (பாதுகாப்பு) செனட் சபையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சுமார் 600 பக்கங்கள் கொண்ட அதில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்புத் துறையில் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு வலுவடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, வங்காள விரிகுடா பகுதியில் அமெரிக்க மற்றும் இந்திய கடற்படையினர் சமீபத்தில் வருடாந்திர பயிற்சி மேற்கொண்டனர். இதில் ஜப்பான் கடற்படையும் இணைந்தது. இதன்மூலம் அனைவருக்கும் பலன் கிடைக்கும்.

அதேநேரம், இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளும் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் அவற்றை செயல்படுத்தும் விஷயத்தில் இடைவெளி ஏற்பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

மிகப்பெரிய பொருளாதார சக்தி யாக உருவெடுத்து வரும் இந்தியா, அமெரி்க்கப் பாதுகாப்புத் துறையின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. எனவே, இணையதளப் பாதுகாப்பு, விண் வெளி துறைகளில் இந்தியாவுடன் நமது பாதுகாப்புத் துறை இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேசித் தீர்க்க வேண்டும்

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவேர்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியா - சீனா இடையிலான மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய டோக் லாம் பகுதியில் மோதலில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு இருதரப்பும் பேச்சு வார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x