Published : 25 Dec 2013 11:09 AM
Last Updated : 25 Dec 2013 11:09 AM

பரிசீலனையில் தேவயானி கோப்ரகடேவின் ஆவணங்கள்

தேவயானி கோப்ரகடேவுக்கு ஐ.நா. தூதரக அதிகாரி அங்கீகாரம் வழங்குவது தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்து வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர் பாளர் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

தேவயானி கோப்ரகடே சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஐ.நா. சபை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த ஆவணங்கள் கடந்த வெள்ளிக்கிழமைதான் கிடைத்தன. அவற்றை எங்கள் அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களை கோரியபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த சங்கீதாவுக்கு விசா பெற்ற போது போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக தேவயானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணிப்பெண்ணுக்கு குறைவான ஊதியம் வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்ட தேவயானி பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை பொதுஇடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோத னையிட்டதை இந்திய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

மேலும் அவர் மீது தொடரப்பட்டுள்ள விசா மோசடி வழக்கை கைவிட வேண்டும் என்றும் இந்திய அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவயானிக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில், நியூயார்க் இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய அவரை ஐ.நா.வுக்கான இந்திய தூதரக ஆலோசகராக இந்திய அரசு நியமித்துள்ளது.

அவரின் பணி நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கி-மூனிடம் அனைத்து ஆவணங்களுடன் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதமும் ஆவணங்களும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவற்றை பரிசீலித்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் தேவயானியின் பணி நியமனத்துக்கு அங்கீகாரம் அளித்து உரிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிகிறது. ஐ.நா. தூதரகப் பணிக்கு தேவயானி மாற்றப்பட்டிருப்பதால் விசா மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x