Published : 12 Jun 2016 11:06 AM
Last Updated : 12 Jun 2016 11:06 AM

உலக மசாலா: சமூகம் இன்னும் மாற வேண்டும்

மெரிக்காவைச் சேர்ந்த ஹலீ சோரென்சன் தன்னுடைய 18-வது பிறந்தநாள் விழாவுக்கு, வகுப்புத் தோழர்கள் 20 பேரை அழைத்திருந்தார். பலூன்களாலும் வண்ணக் காகிதங்களாலும் இடத்தை அலங்கரித்திருந்தனர். விருந்தினர்களுக்கு உணவும் தயாரானது. ஸ்பெஷல் கேக் ஒன்றும் வந்து சேர்ந்தது. ஹலீ நண்பர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் ஒருவர் கூட வரவே இல்லை. தனியாக கேக் முன்னால் அமர்ந்து, கண்ணீர் விட்டார். இந்தக் காட்சி ஹலீயின் அம்மாவை உலுக்கிவிட்டது. ’’என் மகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவள். அவளுக்குப் 18 வயது ஆனாலும் 6 வயது குழந்தையின் மனநிலைதான் இருக்கிறது. பிறந்தநாள் விழாவுக்குத் தன் நண்பர்கள் ஒருவர்கூட வராதது அவளை மிகவும் புண்படுத்திவிட்டது. இன்னொரு முறை ஹலீக்கு இந்தக் கஷ்டம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு யாரையும் அழைக்கப் போவதில்லை’’ என்றார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உறவினர் ரெபேகா லின், ஹலீ தனியாக கேக் முன்னால் அமர்ந்திருந்த படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். ’ஹலீ உள்ளும் புறமும் அழகான, புத்திசாலியான பெண். அன்பானவள். ஓட்டப்பந்தய வீராங்கனை. சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றவள். நன்றாகப் படிப்பவள். இப்படி ஒரு பெண் என் உறவினர் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். குறைபாடு அவளிடம் இல்லை, இந்தச் சமூகத்திடம்தான் இருக்கிறது’ என்று எழுதியிருந்தார். 48 மணி நேரங்களில் 1,20,000 தடவை இந்தப் படம் பகிரப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் குவிந்துவிட்டன! ‘’இந்த ஆண்டு ஹலீயின் மெயில் வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது! வாழ்த்து அட்டைகளைப் பிரித்தபடியே இருக்கிறாள். பொம்மை, நகை, துணி என்று ஏராளமான பரிசுப் பொருட்களும் குவிந்துவிட்டன! இந்த உலகம் அற்புதமானது!’’ என்கிறார் ஹலீயின் அம்மா.

சமூகம் இன்னும் மாற வேண்டும்…

பாஸ்டனைச் சேர்ந்த கெய்த் ஃப்ரான்கெல், விளையாட்டுக்குக்கூடப் பொய் சொல்லாமல் வாழ்ந்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு வரை புராடக் டிசைன் எக்ஸிக்யூட்டிவ் வேலை செய்து வந்தார். தினமும் பொய் சொல்லாமல் இந்த வேலையை அவரால் செய்யவே முடியாது. “தொழில் முறையில் நான் தேர்ந்த பொய் சொல்பவனாக மாறினேன். அதற்கு ஏற்ப என் நிறுவனத்துக்கும் நல்ல லாபம் கிடைத்தது. ஒருகட்டத்தில் பொய் சொல்வதை ஒரு கலையாக மாற்றிவிட்டேன். வீடு, ஆபிஸ் எங்கும் பொய் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி, நான் புத்திசாலியாக நடந்துகொண்டேன். திடீரென்று ஒருநாள் இந்தப் பொய் சொல்லும் வாழ்க்கை அலுப்பைத் தந்தது. நான் விற்கும் பொருளாலோ, என் திறமையாலோ விற்பனை அதிகரிக்கவில்லை. என்னுடைய பொய் மூலமே இது சாத்தியமாகியிருக்கிறது என்பதை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இனி இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாகச் சொல்லி, ஏமாற்ற மாட்டேன் என்று முடிவெடுத்தேன். கடந்த 6 மாதங்களாகப் பொய் சொல்லாமல் வாழ்ந்து வருகிறேன். பொய் சொல்வதைவிட உண்மையாக இருப்பது மிகவும் கஷ்டமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. என் தூரத்து உறவினர் எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். உன்னை யார் என்று எனக்குத் தெரியவில்லை என்று உண்மையைச் சொன்னேன். உடனே அவர் முகம் மாறிவிட்டது. தெரியாவிட்டாலும் கூட தெரிந்த மாதிரி காட்டிக்கக்கூடாதா, அவர் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்று எல்லோரும் சொன்னார்கள். பொய் சொன்னபோது உலகமும் குடும்பமும் என்னைக் கொண்டாடியது. ஆனால் உண்மை சொல்லும்போது எல்லோரும் சங்கடமும் மனக்கஷ்டமும் அடைவதாகச் சொல்கிறார்கள்’’ என்கிறார் கெய்த். பொய் சொல்லாத 6 மாதங்களில், உண்மையாக இருப்பது எப்படி என்பதையும் இடையூறுகளை எப்படிச் சமாளித்தார் என்பது குறித்தும் எழுதி வருகிறார். உரையாற்றி வருகிறார். நேர்மையாக இருப்பதுதான் எளிமையானது. இயற்கையானது என்கிறார் கெய்த்.

உண்மை அழகானது; உன்னதமானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x