Published : 21 Jun 2016 10:25 AM
Last Updated : 21 Jun 2016 10:25 AM

உலக மசாலா: மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள்!

ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள் கனடாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் மெக்ஸிகோ காடுகளை நோக்கிப் படையெடுக்கின்றன. உலகிலேயே மிக நீண்ட பூச்சிகளின் இடப்பெயற்சி இதுதான். சுமார் 2,500 மைல்கள் தூரம் கடந்து மெக்ஸிகோவின் மிசோகன் காடுகளை அடைகின்றன. இங்கே எண்ணிலடங்கா வண்ணத்துப்பூச்சிகள் சேர்ந்து அடர்த்தியாக மரங்களிலும் தரைகளிலும் ஓய்வெடுக்கின்றன. கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளில் மிக அழகானவை மோனார்க்.

சின்னஞ்சிறு பூச்சிகள் ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, பல்வேறு பருவ நிலைகளைச் சந்தித்து, மெக்ஸிகோவுக்கு வந்து சேர்கின்றன. இங்கே நெருக்கமாக மரங்களிலும் கிளைகளிலும் 5 மாதங்கள் வரை தங்குகின்றன. மனிதர்களின் வருகை, சட்டத்துக்குப் புறம்பாக மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களால் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. சூழலும் மாறி வருகிறது. மெக்ஸிகோவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனம், 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு சுரங்கத்தை அமைத்தது.

அது மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால், பலரின் போராட்டங்களுக்குப் பிறகு சுரங்கம் மூடப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் சுரங்கம் அமைக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது. சுரங்கம் வந்தால் இந்த மாயாஜால உலகம் தன் அற்புதத்தை இழந்துவிடும். இவை மட்டுமல்லாமல், அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட சோளம், சோயாபீன்களைப் பயிரிடுவதாலும் களைக்கொல்லிகளின் அதிகரிப்பதாலும் முட்டையிலிருந்து பூச்சியாக மாறும் காலத்து மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

இயற்கை கொடுத்த அற்புதத்தை அழிக்க மனிதர்களுக்கு உரிமை இல்லை…

அமெரிக்கக் காடுகளில் சில மரங்கள் மட்டும் வளைந்து காணப்படுகின்றன. ஏன் சில மரங்கள் மட்டும் நேராக வளராமல், வளைந்து வளர்ந்திருக்கின்றன என்பதற்கான காரணங்கள் நீண்ட காலம் தெரியாமல் இருந்து வந்தன. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே அமெரிக்கக் காடுகளில் வளைந்த மரங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக மரம் வளைந்த மர்மம் குறித்து டென்னிஸ் டவ்னெஸ் ஆராய்ந்து வருகிறார்.

‘’இவை தானாக வளைந்த மரங்கள் அல்ல. காடுகளில் வாழ்ந்த அமெரிக்கப் பூர்வகுடிகள் வளைத்து, வளர வைத்தவை. இது பாதுகாப்பான பகுதி, மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற பகுதி, அருகில் ஆறு இருக்கிறது, வழி போன்ற பல விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகக் காடுகளில் ஆங்காங்கே செடிகளாக இருக்கும்போதே வளைத்து, வளர வைத்தனர். காலப்போக்கில் அவை வளைந்த மரங்களாக மாறிவிட்டன. மரங்களுக்குத் தீங்கிழைக்காமல் ஒருவருக்கு ஒருவர் உதவிகொள்வதற்காகப் பூர்வகுடி மக்கள் இந்த வழிமுறையைக் கையாண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் காடுகளில் வசிக்கவில்லை என்றாலும் அவர்கள் வைத்த மரங்கள் பார்ப்பவர்களுக்குப் புதிராகக் காட்சியளிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு 450 வளைந்த மரங்கள் இருந்தன. மரங்களை வெட்டியதால் தற்போது 155 மரங்களே எஞ்சியுள்ளன’’ என்கிறார் டென்னிஸ்.

இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் பூர்வகுடிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x