Published : 16 Jun 2024 03:41 AM
Last Updated : 16 Jun 2024 03:41 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்: அதிமுக புறக்கணிப்பு; களத்தில் மும்முனை போட்டி

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி 93 ஆயிரத்து 730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 84 ஆயிரத்து 157 வாக்குகள் பெற்று, 9 ஆயிரத்து 573 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள இத்தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. வரும் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனுவை விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பெற்று வருகிறார். நேற்று மாலை வரையில் 6 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஓமியோபதி மருத்துவர் அபிநயா நிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியினருடன் ஆலோசனை: இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினார். இதில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுகவினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து வெற்றி பெற்றனர்.

ஜெயலலிதா புறக்கணித்தார்: திமுகவினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 2009-ல் நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அதே ஆண்டில் பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களை ஜெயலலிதா புறக்கணித்தார்.

2006-ல் திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், திமுகவினரால் வெளிப்படையாக நடத்தப்பட்ட வன்முறைகள், அராஜகங்கள் போன்றவற்றை மக்கள் அனைவரும் நன்கு அறிவர். அதேபோல், 2022 பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அரங்கேற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். `திருமங்கலம் பார்முலா’ என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப்போல, `ஈரோடு கிழக்கு பார்முலா’ என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதைப்போல், வாக்காளர்களை அடைத்து அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது. அந்த வகையில், திமுக ஆட்சியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார் கள். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது. எனவே ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. திமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவின் மக்களாட்சியை மீண்டும் மலரச்செய்வது உறுதி.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறி வித்திருப்பதால், இத்தொகுதி யில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பாமக வேட்பாளர் சி.அன்புமணி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவித்தார். அவர் அறிவித்த மறுநாளான நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் சி.அன்புமணியை பாமக வேட்பாளராக அறிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோது விக்கிரவாண்டி தொகுதியில் கட்சியின் வேட்பாளராக களம் கண்ட சி.அன்புமணி அத்தேர்தலில் 41,428 வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பெற்றார்.

இதற்கிடையே வேட்பாளர் சி.அன்புமணி மாமல்லபுரம் அருகே பனையூரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விழுப்புரம் அருகே பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.அன்புமணி(66). 1982-ல் வன்னியர் சங்க கிளை செயலாளராக பதவி வகித்தார். தொடர்ந்து ஒன்றிய செயலாளர், மாவட்ட தலைவர், மாநில துணை தலைவர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x