Published : 08 Mar 2018 09:33 AM
Last Updated : 08 Mar 2018 09:33 AM

சிரியா கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு:உணவு பொருட்களுடன் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடுங்கள்- ஐ.நா. பொதுச் செயலாளர் உருக்கமான வேண்டுகோள்

சிரியாவில் அதிபர் ஆசாத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க சிரிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய விமானங்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஏராளமான மக்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் அமைதியை ஏற்படுத்த மனிதாபிமான முறையில் 30 நாட்களுக்கு சண்டை நிறுத்தம் செய்ய ஐ.நா.வில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், சிரியாவில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படையினருக்கும் இடையில் சண்டை நடந்து வருகிறது.

கடந்த திங்கள்கிழமை நடந்த சண்டையில் மட்டும் ஏராளமான குழந்தைகள் பலியாயின. இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இதற்கிடையில், படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடி வருபவர்களுக்கு வழங்க ஐ.நா. மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரணப் பொருட்களுடன் பல வாகனங்கள் சென்றன. தகுந்த பாதுகாப்பு இல்லாததால் அந்த வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை.

இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள், அரசு படையினர் உட்பட கலவரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் 30 நாள் சண்டை நிறுத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவருடைய அறிக்கையை ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரக் நேற்று வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ‘‘கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் கவுட்டா நகருக்குள் நிவாரணப் பொருட்களுடன் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கவுட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 70 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்க சிரியா அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தகுந்த பாதுகாப்பு இல்லாததால், உணவு உட்பட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 46 டிரக்குகள் இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடையவில்லை. எனவே, வாகனங்களுக்கு அனைத்து தரப்பினரும் வழிவிட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x