Published : 08 Feb 2024 01:32 AM
Last Updated : 08 Feb 2024 01:32 AM

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: நடப்பு ஆண்டில் இது 5-வது சம்பவம்

இண்டியானா: அமெரிக்க நாட்டில் இந்தியாவை சேர்ந்த 23 வயதான முனைவர் பட்ட மாணவரான சமீர் காமத் உயிரிழந்துள்ளார். நடப்பு ஆண்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் அந்நாட்டில் உயிரிழந்த எண்ணிக்கை ஐந்தாகி உள்ளது.

பர்டூ பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முனைவர் பட்ட மாணவராக சமீர் காமத் இருந்துள்ளார். இதனை அந்த பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து உடற்கூறு ஆய்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலை பட்டம் அவர் முடித்துள்ளார். 2021-ல் பர்டூ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்து, அங்கேயே முனைவர் பட்ட மாணவராகவும் இணைந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிகாகோவிலுள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையது மசாகிர் அலி மீது அண்மையியல் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது முகத்தில் ரத்தம் வடியும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

முன்னதாக, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்த 19 வயதான இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா, பர்டூ பல்கலை. வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைக் காணவில்லை, கண்டுபிடிக்க உதவுங்கள் என மாணவரின் தாயார் வேண்டுகோள்விடுத்த அடுத்த நாள் இத்துயரச் சம்பவம் நடந்தது.

ஜன.16-ம் தேதி ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர் ஜார்ஜியாவின் லிதோனியாவில் வீடில்லாத ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதே ஜன.மாதம், இல்லினோய்ஸ் அர்பானா சாம்பெய்ன் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மற்றொரு இந்திய மாணவரான அகுல் தவான் இறந்து கிடந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x