Published : 07 Feb 2024 10:59 PM
Last Updated : 07 Feb 2024 10:59 PM

‘பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்’ - காசியில் சக மனிதனை நம்பி உடமைகளை இழந்த புதுச்சேரிக்காரர்

ஜான் பீட்டர் | படம் & வீடியோ: புஹாரி ஜங்ஷன்

வாராணசி: கல்விக் கூடங்களில் பயிலும் பாடங்களை காட்டிலும் எதார்த்த வாழ்வில் சக மனிதர்கள் பயிற்றுவிக்கும் பாடம் பெரியது. அது அனுபவ பாடம். அப்படியொரு அனுபவ பாடத்தை தான் பெற்றுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த ஜான் பீட்டர். சக மனிதனை நம்பி காசியில் தனது உடமைகளை இழந்துள்ளார். இப்போது காசியில் நாடோடியாக நாட்களை கடத்தி வருகிறார்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம். இல்வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக மன நிம்மதி தேடி காசிக்கு புறப்பட்டுள்ளார். பகவான் ஈசன் மீது தனக்கு ஈர்ப்பு வர தனது நண்பர்கள் தான் காரணம் என ஜான் சொல்கிறார். அதை சொல்லும்போது அவரது குரலில் ஒரு நம்பிக்கை இருப்பதை உணர முடிகிறது.

‘காசி’, மோட்ச ஸ்தலம் என சொல்வதுண்டு. பலரும் பல்வேறு நோக்கத்துடன் இங்கு வந்து செல்கிறார்கள். இந்தியாவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தியா மட்டுமல்லாது அயல்நாட்டு மக்களும் இங்கு வருவது வழக்கம். பாரதியார் வசித்த ஊர். காசி நோக்கி பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான மக்களில் ஜானும் ஒருவர். தன்னுடன் பயணித்த, தமிழ் பேசிய ஒருவரை நம்பி உடமைகளை இழந்துள்ளார். அவரது கையறு நிலையை அறிந்து அவருக்கு உதவியுள்ளனர் காசி நகரில் தெருவோரம் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்.

“திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக சில காலம் காசியில் இருக்கலாம் என ஊரில் இருந்து வந்தேன். செலவுக்கு அம்மா கொடுத்த காசு கையில் இருந்தது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட சில மொழிகள் அறிவேன். என்னோடு சீர்காழியை சேர்ந்த ஒருவர் வந்தார். அவரும் நானும் பேசி வந்தோம். ஒன்றாக தங்கியிருந்த நேரத்தில் எனது கையில் இருந்த பணத்தை எடுத்து சென்றுவிட்டார்.

தொடர்ந்து எனது பை, குளிரில் இருந்து தப்பிக்க என் வசம் இருந்த போர்வை என அனைத்தையும் இழந்தேன். எனது நிலையை அறிந்த வியாபாரிகள் எனக்கு உதவினர். இப்போது அவர்களது கடையை நான் கவனித்து வருகிறேன். இங்குள்ள அன்ன சத்திரங்களில் உணவு சாப்பிடுகிறேன். இந்த கடையில் வேலை பார்ப்பதும் இனிதான அனுபவமாக உள்ளது” என ஜான் பீட்டர் சொல்கிறார்.

ஜான், முன்னி மற்றும் புஹாரி ராஜா

ஜானுக்கு, முன்னி என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். காசிக்கு பயண நிமித்தமாக சென்ற தமிழகத்தை சேர்ந்த யூடியூபரான புஹாரி ராஜா, தமிழில் பேசுவதை கேட்டு, அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு விவரத்தை ஜான் தெரிவித்துள்ளார். அவர் குறித்த விவரத்தை தனது ‘புஹாரி ஜங்ஷன்’ சேனலில் பதிவும் செய்துள்ளார். வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x