Published : 07 Jan 2018 03:20 PM
Last Updated : 07 Jan 2018 03:20 PM

சீன கடல் பகுதியில் சரக்குக் கப்பல்கள் மோதல்: ஈரானிய எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்தது: 32 பேர் காணவில்லை

கிழக்கு சீனக் கடலில் இரு சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்டதில் 32 கப்பல் பணியாளர்கள் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இது பற்றிய விவரம் வருமாறு:

ஈரானிலிருந்து தென்கொரியாவுக்கு எண்ணெய் கொண்டுசெல்லும் டேங்கர் கப்பல் கிழக்கு சீனா கடல் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததுடன், எண்ணெய் வெளியேறி கடலில் கசியத் தொடங்கியது. இக்கப்பலின் பணியாளர்கள் 32 பேர் காணவில்லை.

சனிக்கிழமை இரவு ஈரானிலிருந்து வந்துகொண்டிருந்த கப்பல் டேங்கரில் 1,36,000 டன் அளவுகொண்ட எண்ணெய் இருந்தது. அப்போது எதிரே வந்த இன்னொரு சரக்குக் கப்பலுடன் மோதியதில் எண்ணெய் டேங்கர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து இக்கப்பலில் வந்த 30 ஈரானியர்களும் 2 வங்கதேசத்தவர்களும் காணவில்லை என சீன போக்குவரத்து அமைச்சகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

மோதலில் சிக்கிய இன்னொரு கப்பல் சற்றே சேதாரமடைந்துள்ளது. ஆனால் அதன் பாதுகாப்புக்கு எந்தவித ஊறும் ஏற்படவில்லை. மேலும் அதிலிருந்த 21 சீனக் கப்பல் குழுவினரும் மீட்கப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

எண்ணெய் கப்பலிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் தீமூட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நின்றபாடில்லை. மிகப்பெரிய தீ வளையம் சூழ்ந்தப் பகுதியாக காட்சியளிப்பதாகவும் மேகங்கள் கருப்புப் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் அரசின் தொலைக்காட்சி சேனல் சி.சி.டி.வி.மூலம் ஒளிபரப்பப்பட்ட படங்களில் காணப்படுகிறது.

இவ்விபத்து ஷங்காய் நகரிலிருந்து 160 கடல்மைல் தொலைவில் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது கப்பல் ஹாங் காங் கொடியுடன் 64 டன் தானியப் பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.

சாஞ்சி டேங்கர் கப்பல் இன்னும் மிதந்துகொண்டிருக்கிறது. கடல்பரப்பில் பெருமளவில் எண்ணெய் பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கடல்நீருக்குள்ளே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் பெட்ரோலியம் அமைச்சகம் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், விபத்துக்குள்ளான இக்கப்பல் தேசிய ஈரானிய டேங்கர் கம்பெனிக்கு சொந்தமானது என்றும் தென் கொரியாவின் ஹன்வா மொத்தம் தனது சரக்குகளை வழங்குவதற்காக சென்றுகொண்டிருந்து என்றும் கூறியுள்ளது.

விபத்துக்குள்ளான ஈரானைச் சேர்ந்த சாஞ்சி டேங்கர் கப்பல் மற்றும் அதன் சரக்கு காப்பீடு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x