Published : 20 Oct 2023 05:41 AM
Last Updated : 20 Oct 2023 05:41 AM

வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

கோப்புப்படம்

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

வடகொரிய ராணுவத்தில் எப்7 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படுகின்றன. அங்கிருந்து ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு ஏவுகணைகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.

தற்போதைய போரில் வடகொரிய ராணுவத்தின் எப் -7 ரகஏவுகணைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளை ஆய்வு செய்தபோது, அவை எப்7 ஏவுகணைகள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வடகொரியாவின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் பீனிக்ஸ் ஏவுகணைகளும் ஹமாஸ் வசம் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம்.

போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகளிடம் ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருகிறது. இப்போதைய நிலையில் அவர்களிடம் சுமார் 1,000 ஏவுகணைகள் மட்டுமே இருக்கக்கூடும். அந்த அமைப்புக்கான ஆயுத விநியோக சங்கிலி முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மனிதாபிமான சட்டத்தை மதித்து நடக்க இந்தியா வேண்டுகோள்: கடந்த 17-ம் தேதி இரவு பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில் 500 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனை மீதான தாக்குதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி நேற்று கூறியதாவது:

இஸ்ரேல் மக்கள் மீதான தீவிரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. தீவிரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் ஓரணியில் அணிவகுக்க வேண்டும். அனைத்து வகையான தீவிரவாதத்தையும் அழிக்க வேண்டும்.

காசா பகுதியின் அல் ஆஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த கவலை அளிக்கிறது. போரில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு அதிகரித்து வருவது வேதனையானது. இந்த இக்கட்டான சூழலில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் இரு நாடுகள் கொள்கையை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதையே இப்போதும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறும் அரிந்தம் பாகி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x