Last Updated : 07 Jan, 2018 10:38 AM

 

Published : 07 Jan 2018 10:38 AM
Last Updated : 07 Jan 2018 10:38 AM

பாக். தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் காஷ்மீர் எல்லையில் வசிக்கும் 54 ஆயிரம் பேருக்கு பதுங்கு குழிகள்: மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டு

பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு, 5,300 பதுங்கு குழிகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எல்லையில் வசிக்கும் 54 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்குவதற்கு 5,300 பதுங்கு குழிகள் அல்லது பாதுகாப்பு அரண்கள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில் நேற்றுமுன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் கட்டுப்பாட்டு எல்லை கோட்டருகில் உள்ள சுந்தர்பானி, நவ்ஷெரா, டூங்கி, மன்ஜகோட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், கள அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின்னர் ரஜோரி மாவட்ட வளர்ச்சித் துறை ஆணையர் ஷாகித் இக்பால் சவுத்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல்லை பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தனித்தனி பதுங்கு குழிகள் மற்றும் சமூக பதுங்கு குழிகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே, 100 பதுங்கு குழிகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 4,918 தனி பதுங்கு குழிகளும் 372 சமூக பதுங்கு குழிகளும் கட்டப்படும்.

சமூக பதுங்கு குழிகள் ஒவ்வொன்றும் 800 சதுர அடியில் கட்டப்படும். இங்கு 40 பேர் தங்கலாம். 60 சதுர அடியில் தனி பதுங்கு குழிகள் கட்டப்படும். ஒரு தனி பதுங்கு குழியில் 8 பேர் வரை தங்கலாம். இதன்மூலம் பாகிஸ்தான் படையினர் தாக்குதலில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

மேலும், பாகிஸ்தான் தாக்குதலால் எல்லையில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பெரியவர்களுக்கு தலா ரூ.1,800-ம் குழந்தைகளுக்கு ரூ.1,300-ம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஷாகித் இக்பால் கூறினார்.

குறிப்பிட்ட கால கெடுவுக்குள் எல்லைப் பகுதியில் பதுங்கு குழிகளை கட்டி முடிப்பது குறித்து உள்ளூர் மக்கள், பொறியாளர்கள், ராணுவ அதிகாரிகள், மாவட்ட நிர்வாக தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

மேலும் பாகிஸ்தான் படையினர் தாக்குதலால் ஆடு, மாடுகள், பயிர்கள், வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்து பாதிக்கப்பட்ட எல்லை பகுதி மக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்துக்கு எல்லை வாழ் மக்கள் மனமாரப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x