Published : 26 Dec 2017 10:12 AM
Last Updated : 26 Dec 2017 10:12 AM

உலக மசாலா: புதுமையான அக்ரோபடிக்ஸ்!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஸ்டெஃபானி மில்லிங்கர், அக்ரோபடிக்ஸ் கலைஞராக இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய உதவியாளர் பழுப்புக் கரடியுடன் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, விதவிதமாகப் படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார். உடலை ரப்பர்போல் வளைப்பதில் மிகச் சிறந்தவராக அறியப்படுகிற இந்த ஸ்டெஃபானி, ஜெர்மனியில் நடைபெற்ற ‘டாஸ் சூப்பர்டேலண்ட்’ ஷோவின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர். “என்னைப்போல் உலகம் முழுவதும் அக்ரோபடிக்ஸ் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து நான் எந்த விதத்திலாவது வித்தியாசப்பட வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் என்னுடைய நண்பன் ஸ்டீபன் கரடியை வைத்து, உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற யோசனை தோன்றியது. அவனும் எனக்கு நன்றாக ஒத்துழைத்து, என் உதவியாளனாகவே மாறிவிட்டான்! பனிப்பகுதியில் படங்களை எடுக்க முடிவு செய்தேன். கை, கால்களில் உறைகள் அணிந்துகொண்டேன். ஸ்டீபனுக்குக் குளிரைத் தாங்குவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஒவ்வொரு படமும் எடுத்தவுடன் சில பெர்ரிகளைக் கொடுத்தால் போதும். அவ்வளவு ஆர்வமாக வேலை செய்தான். நான் நினைத்ததைவிட படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. இந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவுடன் என்னைப் புதிதாகப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துவிட்டது!” என்கிறார் ஸ்டெஃபானி.

புதுமையான அக்ரோபடிக்ஸ்!

கரடியும் நாயும் கலந்த உயிரினம் இருந்தால் எப்படி இருக்கும்! அப்படி ஒரு விலங்கை ரஷ்யாவில் விலங்குகள் மீட்புக் குழுவினர் மீட்டிருக்கிறார்கள். இந்தக் கரடி நாய், பார்ப்பதற்கு கறுப்புக் கரடி போலவே தெரிகிறது. ஆனால் முழுமையான கரடியாகவும் இல்லை, முழுமையான நாயாகவும் இல்லை. “இது ஏதோ மர்மமான உயிரினம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் கரடியும் நாயும் சேர்ந்த கலப்பினம். கரடியின் தோற்றமும் நாயின் குணநலன்களும் பெற்றுள்ளது. யாரோ நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடியவர்களின் வேலையாகத்தான் இது இருக்கும். குட்டியாக இருந்தபோது ஏமாற்றி விற்றிருப்பார்கள். வளர்ந்த பிறகு இந்த அதிசய உயிரினத்தைப் பார்த்து பயந்துபோன உரிமையாளர்கள் துரத்திவிட்டிருக்கிறார்கள். மனிதர்களின் மோசமான நடவடிக்கைகளால் இந்தக் கரடிநாய் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறது. இப்போதுதான் மருத்துவமும் நல்ல உணவும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். மனிதர்களைக் கண்டாலே இது பயப்படுகிறது. தப்பித்துச் செல்லவே நினைக்கிறது. நாங்கள் அன்பாக நடத்தி, மனிதர்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்த இருக்கிறோம். இங்கு வந்த பிறகும் கரடிநாயின் கண்களில் பயம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. இணையதளத்தில் இதைப் பற்றிய செய்திகளை வெளியிட்டோம். ஏராளமானவர்கள் உதவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் விலங்குகள் மீட்பு மையத்தைச் சேர்ந்த தன்னார்வலர் போலினா.

கரடி பாதி, நாய் பாதி… இரண்டும் சேர்ந்த அதிசய உயிரினம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x