Published : 03 May 2024 04:03 PM
Last Updated : 03 May 2024 04:03 PM

17 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மலை - சென்னை ரயில் சேவை: மலர் தூவி வழியனுப்பி வைப்பு

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு புறப்பட்ட ரயில் மீது மலர்களை தூவி பொதுமக்கள் வழியனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது.

விழுப்புரம் - காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. இப்பணியை தொடங்குவதற்கு முன்பாக, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி நிறுத்தப்பட்டன. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, நிறுத்தப்பட்ட தாம்பரம் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என காத்திருந்த அனைத்து தரப்பு மக்களும் ஏமாற்றமடைந்தனர்.

ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் உள்ளிட்டோர் ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதன் எதிரொலியாக சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்தது. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே திட்டமிட்டபடி, சென்னை கடற்கரையில் இருந்து நேற்று (மே 2-ம் தேதி) மாலை 6 மணிக்கு புறப்பட்ட மெமு ரயில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடைந்தன.

இதையடுத்து, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இன்று(மே 3-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு மெமு ரயில் புறப்பட்டு சென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட ரயில் எஞ்ஜின் மீது மலர்களை தூவி ஆன்மிக அன்பர்கள், பொது நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிடோர் வழியனுப்பி வைத்தனர். ரயில் எஞ்ஜின் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பயணிக்க கட்டணமாக ரூ.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. அரசு பேருந்துகளுடன் ஒப்பிடும்போது நான்கில் ஒரு மடங்கு மட்டுமே உள்ளதால் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, மெமு ரயிலை தடையின்றி தொடர்ந்து இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளன.

பயண நேரமும், கட்டணமும்... : திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து தினசரி அதிகாலை 4 மணிக்கு மெமு ரயில் புறப்படுகிறது. போளூர் (அதிகாலை 4.28 மணி - ரூ.10), மதிமங்கலம்(4.39 மணி - ரூ.10), ஆரணி சாலை (4.46 மணி - ரூ.15), சேதாரம்பட்டு(4.54 மணி - ரூ.15), ஒண்ணுபுரம்(5 மணி - ரூ.20), கண்ணமங்கலம்(5.10 மணி - ரூ.20), பென்னாத்தூர்(5.24 மணி - ரூ.20), வேலூர் கண்டோன்மென்ட் (காலை 6 மணி - ரூ.25), காட்பாடி(6.18 மணி - ரூ.25), திருவலம்(6.34 மணி - ரூ.25), முகுந்தராயபுரம் (6.39 மணி - ரூ.25), வாலாஜா சாலை(6.49 மணி - ரூ.30), தலங்கை (7 மணி - ரூ.30), சோளிங்கர் (7.14 மணி - ரூ.30), அனவர்திகான் பேட்டை (7.25 மணி - ரூ.35), சித்தேரி (7.35 மணி - ரூ.35)

அரக்கோணம் (7.58 மணி - ரூ.35), புளியமங்கலம் (8.04 மணி - ரூ.35), மோசூர் (8.07 மணி - ரூ.35), திருவலங்காடு (8.12 மணி - ரூ.40), மன்னவூர் (8.17 மணி - ரூ.40), செஞ்சி பனம்பாக்கம் (8.21 மணி - ரூ.40), கடம்பத்தூர் (8.25 மணி - ரூ.40), ஈகத்தூர் ஹால்ட் (8.29 மணி - ரூ.40), செவ்வாபேட்டை சாலை (8.41 மணி - ரூ.45), வேப்பம்பட்டு (8.44 மணி - ரூ.45), திருநின்றவூர் (8.49 மணி - ரூ.45), வில்லிவாக்கம் (9.09 மணி - ரூ.45), பெரம்பூர் (9.14 மணி - ரூ.50), வண்ணாரப்பேட்டை (9.25 மணி - ரூ.50), ராயபுரம் (9.31 மணி - ரூ.50) வழியாக சென்னை கடற்கரையை காலை 9.50 மணிக்கு (ரூ.50) மெமு ரயில் சென்றடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x