Published : 28 Dec 2017 01:59 PM
Last Updated : 28 Dec 2017 01:59 PM

ஜெருசலேமில் அமையவுள்ள புதிய ரயில் நிலையத்துக்கு ட்ரம்ப் பெயர்: இஸ்ரேல்

ஜெருசலேமில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் நிலையத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் சூட்டப்படும் என்று இஸ்ரேல் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதாகவும், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அறிவித்தார். இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இதற்கு 128 நாடுகள் ஆதரவு அளித்தன.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக பெரும்பான்மையான உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், இஸ்ரேல் ஜெருசலேமை தனது தலைநகராக அறிவித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜெருசலேமில் அமையவுள்ள புதிய ரயில் நிலையத்துக்கு ட்ரம்பின் பெயர் சூட்டப்படவுள்ளதாக இஸ்ரேல் போக்குவரத்துத் துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து காட்ஸ் கூறும்போது, “இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தற்கு அமெரிக்க அதிபரை கவுரப்படுத்த இருக்கிறேன். ஜெருசலேமில் அமையவுள்ள புதிய ரயில் நிலையத்துக்கு ட்ரம்ப் பெயர் சூட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1967-ல் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைபற்றியது முதல் அந்த நகரின் உரிமை தொடர்பாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் நிலவி வருகிறது. அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் கூட, ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என்பதை ஏற்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, ஜெருசலேம் நகருக்கு மாற்றும் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x