Published : 21 Sep 2022 06:12 AM
Last Updated : 21 Sep 2022 06:12 AM

தாத்தா, பாட்டியுடன் விளையாடுங்கள் குழந்தைகளே!

ஞாபக மறதி என்றால் என்ன? இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லலாம். ஆனால், மனக் கணக்குப் போடுவதில் குழப்பம், சமையலில் உப்பு போட்டோமா, இல்லையா என்ற சந்தேகம், வீட்டைப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற குழப்பத்துடன் கூடிய சந்தேகம் எல்லாமே ஞாபக மறதிதான். இவை எப்போதாவது நடந்தால் பிரச்சினை இல்லை. ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரணமாக அலட்சியப்படுத்தக் கூடாது. அது அல்செய்மர் எனப்படும் ஞாபக மறதி நோயின் தொடக்க அறிகுறியாக இருக்கலாம்.

அல்செய்மர் என்பது வயதானவர்களுக்கு வரக்கூடிய ஒரு நோய்தான். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய நோய். இன்று மனித வாழ்நாள் அதிகரித்துவிட்டது. அதனால், வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது; அல்செய்மர் நோயாளி களும் அதிகரித்து வருகிறார்கள்.

உலக அளவில் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10-ல் ஒருவர் இந்தியர். இந்தியாவில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ல் இரு மடங்காகும் வாய்ப்புகள் உள்ளன. சின்ன சின்ன விஷயங்களில் ஞாபகம் தப்பிப்போவதுதான் இந்நோயின் ஆரம்ப அறிகுறி. ஒரு பொருளை ஓரிடத்தில் வைத்துவிட்டு மறந்துவிடுவார்கள். இந்நோய் தீவிரமடையும்போது, பீரோ என்று நினைத்து துணியை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். ஓரிடத்துக்கு தனியாகப் போய்விட்டுத் திரும்பி வர சிரமப்படுவார்கள். காலை, மாலை நேரம் குறித்த குழப்பத்தில் தவிப்பார்கள். யாருடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவார்கள். இவ்வளவு ஏன், காலையில் என்ன சாப்பிட்டோம் என்று நினைவுகூட இருக்காது. இப்படிப் பாதிப்பு களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

நல்ல பழக்கம் முக்கியம்! - வயதானவர்களில் ஆண்களைவிடப் பெண்களுக்குதான் இந்நோய் அதிகம் வருகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வாதநோய் ஏற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், தலையில் காயம் ஏற்பட்டவர்களுக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

எனவே, உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவுநோயைக் கட்டுப்பாட் டில் வைத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். புகை, மதுப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். இது போன்றவற்றை வயது முதிர்ந்த பிறகு மட்டும் கடைபிடித்து பயனில்லை. சிறுவயதிலிருந்தே தீய பழக்கங்களை தவிர்த்துவிட்டு நல்ல பழக்கங்களை தனதாக்கிக் கொள்ள வேண்டும். மூப்பை எட்டிய பிறகு தலையில் காயம் ஏற்படாமல் இருக்கத் தலைக்கவசம் அணிய வேண்டும் போன்ற அம்சங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம். அதேபோல உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றமும் தேவை.

தடுக்க வழி உண்டா? - பொதுவாக வீட்டில் அம்மா, அப்பாவின் வேலைப் பளு காரணாமாக தாத்தா, பாட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் அதிக நேரத்தைச் செலவிட வாய்ப்புகள் உண்டு. அப்படி தாத்தா, பாட்டியுடன் நேரத்தைச் செலவிடும்போது, அவர்கள் ஞாபக மறதியில் செய்யும் செயல்களைப் பற்றி வீட்டில் அம்மா, அப்பாவிடம் எடுத்துச் சொல்லி அவர்களை ‘அலர்ட்’ செய்ய வேண்டும். தொடக்க நிலையில் நோயைக் கண்டுபிடித்தால், அதன் தீவிரத்தைக் குறைக்க முடியும்.

மூளைக்கு சவால் - அதேபோல இந்த நோய் வராமல் தடுக்கவும் முடியும். அதற்கு அறிவைத் தூண்டக்கூடிய சுடோகு, சதுரங்க ஆட்டம், புதிர் விளையாட்டுகளில் ஈடுபட தாத்தா, பாட்டிகளுக்கு குழந்தைகள் உதவ வேண்டும். குழந்தைகளும் இந்த விளையாட்டுகளை விளையாட வேண்டும். சிறு வயதிலிருந்தே மூளைக்கு சவால் விடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் வயதானவர்கள் ஆகும்போது ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கலாம். இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே செப்டம்பர் 21 உலக ஞாபகமறதி நோய் நாளாக (World Alzheimer's Day) கடைபிடிக்கப்படுகிறது.

கட்டுரையாளர்: மூளை நரம்பியல் நிபுணர்

தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x