Last Updated : 21 Sep, 2022 07:20 AM

 

Published : 21 Sep 2022 07:20 AM
Last Updated : 21 Sep 2022 07:20 AM

மாவேலியின் நிறம் கறுப்பு

இந்த ஆண்டு ஓணம் எனக்குச் சிறப்பாக விடிந்தது. எனக்குக் கணிசமான மலையாளி நண்பர்கள் உண்டு. இந்துக்களைவிடக் கிறிஸ்தவர்கள் அதிகம்; இஸ்லாமியர்களும் உண்டு. எல்லாரோடும் எப்போதும் தொடர்பில் இருப்பது சாத்தியமில்லைதானே? ஆனால், இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஓணத் திருநாளன்று வாழ்த்து அனுப்ப மறப்பதில்லை. வாழ்த்துடன் ஒரு படமும் இருக்கும். அது பூக்கோலமாகவோ மாவேலி மன்னனின் படமாகவோ இருக்கும்.

மாவேலி ஓலைக் குடை பிடித்திருப்பார். திறந்த மார்பு, பானை வயிறு, சிவந்த மேனி, நெஞ்சு நிறைய ஆபரணங்கள், அடர்த்தியான மீசை, பூணூல் அணிந்திருப்பார். இந்த முறையும் அப்படியான படங்கள் வந்தன. ஆனால், மணிச் சேட்டனும் அவராச்சான் என்றழைக்கப்படுகிற ஜார்ஜ் அபிரகாமும் அனுப்பிய இரண்டு படங்கள் வித்தியாசமாக இருந்தன. இந்த மாவேலியும் ஓலைக் குடை பிடித்திருந்தார். இவருக்கும் திறந்த மார்புதான். பெரிய மீசையும் இருந்தது. ஆனால், ஒற்றுமைகள் இந்த இடத்துடன் முடிகின்றன. கறுத்த, மெலிந்த, ஆனால் விறைப்பான மேனி, நாட்டுப்பூக்கள் கோக்கப்பட்ட மாலை, நீல நிறத்தில் தோள் துண்டு அணிந்திருந்தார்.

மாவேலியின் தோற்றம்!: கடந்த சில ஆண்டுகளாகவே மாவேலியின் தோற்றம் குறித்த விவாதம் கேரளத்தில் நடைபெற்றுவருகிறது. அதற்கு வாமனனின் கதைதான் காரணம். “மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே/ மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே” என்று வாமனனின் கதையைக் குறுகத் தரிக்கிறார் கண்ணதாசன். இந்த வாமனனைத்தான் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று ஆண்டாள் பாடுகிறார். கண்ணதாசனுக்கு அதில் உடன்பாடில்லை என்று ஊகிக்கலாம். மாவேலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டுப் பெற்ற வாமனன், பேருருக் கொண்டு விண்ணையும் மண்ணையும் அளந்தான்; மூன்றாவது அடியாக மாவேலியின் தலையில் கால் வைத்து அமிழ்த்தினான்.

இந்தக் கதையில் கண்ணதாசன் வாமனனின் பக்கமல்ல, மாவேலியின் பக்கம்தான் நிற்கிறார். பாரிஸ்டர் ரஜினிகாந்த் கண்ணனைத் தனது மகனாகக் கருதி வளர்க்கிறார்; ஆனால் கண்ணன் அவருக்கு எதிராகத் திரும்புகிறான் (படம்: கௌரவம், 1973). ‘வளர்த்த கண்ணன் தந்தையின் நெஞ்சிலே’ மிதிக்கிறான். இதற்கு உவமையாகத்தான், மன்னவன் தலையிலே வாமனன் கால் வைத்த கதையைச் சொல்கிறார் கண்ணதாசன். மலையாளிகளும் கண்ணதாசனைப் போல் மாவேலியின் பக்கம்தான் நிற்கிறார்கள். வாக்கு மாறாதவன் என்பதைப் போல் நல்லாட்சி தந்தவன் மாவேலி. அதனால் மலையாளிகளுக்குப் பிரியமானவன். ஓணத்தன்று அவன் ஓலைக் குடை பிடித்துத் தனது குடிகளைக் காண வருகிறான். அவர்கள் பூக்கோலமிட்டு அவனை வரவேற்கிறார்கள்.

சில ஆண்டுகளாகவே புழக்கத்திலிருக்கும் மாவேலியின் சித்திரம் விவாதத்திற்கு உள்ளாகிவருகிறது. நிற வேற்றுமையைப் போற்றிய காலனிய ஆட்சி நம் கருத்தியலில் செலுத்திய செல்வாக்கும், நம் சாதியக் கட்டமைப்பில் நிறம் வகிக்கும் பங்கும் இதற்கு முக்கியக் காரணங்கள். மாவேலி ஓர் அசுரன். திராவிட மன்னன். தேவர்களின் நிறம் சிவப்பு. அசுரர்களின் நிறம் கறுப்பு. அதுதானே தொன்மம்? அப்படியிருக்க மாவேலி எப்படிச் சிவந்த மேனியன் ஆவான் என்கிற கேள்வி சுற்றில் இருந்தது. இதன் தொடர்ச்சியாகக் கறுப்பு மாவேலியின் சித்திரங்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வலம்வரத் தொடங்கின. இந்த முறை அதற்குக் கூடுதல் வெளிச்சம் கிடைத்தது. அதற்கு மாணவர்கள் ஒரு காரணம்.

‘கிள்ளிப் போட்டா வெளக்கெரியும்': வடக்கே தலைசேரி பிரனென் கல்லூரியில் தொடங்கி, திருச்சூர் கேரள வர்மா கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி வழியாக, தெற்கே திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரி வரை கறுப்பு மாவேலியின் படத்தை அவர்கள் பிரபலப்படுத்தினார்கள். அந்தப் படத்தைத்தான் அவராச்சானும் மணிச் சேட்டனும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்கள் இருவரும் சிவப்பு மோகத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். பலரால் முடிவதில்லை. விசாலாட்சி ஓர் உதாரணம்.விசாலாட்சி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) எனக்குத் தங்கை முறை. சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். தனது மகள் லட்சுமிக்குத் திருமணம் பேசி முடித்திருக்கிறார். சம்பந்தபுரத்தைப் பற்றிப் பெருமையாகச் சொன்னாள். அவர்களுக்குப் பெரிய இடமெல்லாம் வந்தது. ஆனால், லட்சுமியை விரும்பிக் கேட்டார்கள். ஏன்? அந்தக் கேள்விக்குப் பதிலாகத்தான் அந்த வசனத்தைச் சொன்னார் விசாலாட்சி. ‘நம்ம லட்சுமி கிள்ளிப் போட்டா வெளக்கெரியும், அம்புட்டுச் சிவப்பு’. பேச்சுக்கு இடையில் விசாலாட்சி வெகு இயல்பாகச் சொன்ன இந்த வசனம் வெகு வசீகரமாக இருந்தது.

ஒரு பெண்ணின் சிவப்பு நிறத்தை வர்ணிப்பதற்குத் தோலையே நெருப்பாக உருவகிக்கும் ஒரு வசனத்தைக் கேட்டு நான் அசந்துபோனேன். பையனைக் கிள்ளிப்போட்டால் என்ன எரியும் என்று கேட்க நினைத்தேன். என் மனைவி அந்தக் கேள்வியை எந்தச் சோடனையுமின்றிக் கேட்டார். ‘பையனும் நெறந்தானே?’. விசாலாட்சி ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார். ‘மாநிறம்’. அதன் பொருள் எங்கள் இருவருக்கும் விளங்கியது.

மாவேலியின் நிறம் கறுப்பு!: சிவப்பு மோகத்தை நமது தலைக்குள் யாரோ எழுதி வைத்துவிட்டார்கள். அதைச் சமீபத்தில் ராமேஸ்வரம் ஆலயத்தில் பார்த்தேன். அம்மன் சன்னதிக்கு நேர் எதிராக வெளிநடையில், ஒவ்வொரு தூணிலும் ஆலயத் திருப்பணி செய்த சேதுபதி மன்னர்களின் சிலைகள் வரிசையாக நிற்கின்றன. ஆளுயரச் சிலைகள். திறந்த மார்பு, வேட்டி, உருமால் சகிதம் மன்னர்கள் அம்மனைக் கைகூப்பித் தொழுதபடி நிற்கிறார்கள். எல்லாரும் கரிய நிறத்தவர்கள்தாம். கற்சிலைகளாக வடிக்கப்பட்டவர்கள்தாம். ஏதோ ஒரு குடமுழுக்கின்போது இந்த மன்னர்களுக்கு வண்ணம் பூசியிருக்கிறார்கள். அப்போது இந்தக் கறுப்பு நிற மன்னர்கள் யாவரும் நல்ல சிவப்பு நிறத்திற்கு மாறிவிட்டார்கள். ஏன் கறுப்பு நிறத்திலேயே அவர்களை விட்டிருக்கலாமே என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. சிவப்பை யார் குறை சொல்வர்?

ஆனால், கண்ணதாசனுக்குச் சிவப்பு மோகம் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் கண்ணனுக்குக் கறுப்பு நிறந்தான் கொடுத்திருக்கிறார். ‘கருமை நிறக் கண்ணா/ உன்னை மறுப்பாரில்லை/ கண்டு வெறுப்பாரில்லை’ என்று பாடுகிறார். (படம்: நானும் ஒரு பெண், 1963). அவர் மாவேலிக்கும் கறுப்பு நிறந்தான் கொடுத்திருப்பார். இன்று இருந்திருந்தால் கறுப்பு நிற மாவேலியின் சித்திரத்தை உயர்த்திப் பிடித்த மலையாளிகளை வாழ்த்திப் பாடியிருப்பார். கறுப்புதான் நமது நிறம். அதில் எந்தத் தாழ்வுமில்லை. அந்த ஞானம் நம் சமூகத்துக்கு வர வேண்டும். அப்போது விசாலாட்சி சிவப்புத் தோலுக்கு நெருப்பை உவமிக்க மாட்டார். சேதுபதி மன்னர்களுக்குச் சிவப்புச் சாயம் பூச மாட்டோம். இந்த மாவேலிச் சித்திரங்கள், நிற மோகத்தை மறுதலிப்பதில் தமிழர்களைவிட மலையாளிகள் ஒரு அடி முன்னே இருப்பதாகக் கருத வைக்கிறது. கறுப்பு மாவேலியின் படத்துக்குப் பொதுத் தளத்தில் பெரிய எதிர்ப்புகள் எழுந்ததாகத் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் கறுப்பு நிற மாவேலி கூடுதல் பிரபலமாவார் என்று எதிர்பார்க்கலாம்!

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x