Published : 18 Jan 2024 04:30 AM
Last Updated : 18 Jan 2024 04:30 AM

சென்னை புத்தகக் காட்சி 2024 | பார்வையற்றோர் டிஜிட்டல் முறையில் கல்வி கற்க புதிய வசதி

சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளி குழந் தைகளின் வாசிப்பை வலுப்படுத்த பிரெய்லி முறை நடைமுறையில் உள்ளது. பிரெய்லி முறையில் கல்வி கற்று பேராசிரியராக, மென்பொருள் நிறுவன ஊழியராக, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பலர் பணி புரிந்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி எழுத்தாளர் களும் பலர் உருவெடுத்துள்ளனர். குறிப்பாக நாக்பூரைச் சேர்ந்த வினோத் அசுதானி என்பவர் பார்வையற்ற எழுத்தாளர் 2023-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

இருப்பினும் சாதாரண மாணவர்கள் எலக்ட்ரானிக் கருவிகளை பயன் படுத்தி துரிதமாகக் கற்பது போன்று பார்வையற்றவர்களும் கல்வி கற்கஅவர்களுக்கு ஏற்ற மாதிரி தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட வேண்டும் இல்லையா! இவ்வாறு பார்வையற் றோருக்கு உயர்தொழில்நுட்ப ரீதியில் வாசிக்கக்கூடிய அதிநவீன கருவிகளை வடிவமைத்து வருகிறது சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கர்ண வித்யா பவுண்டேஷன். நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் இவர்களுடைய ஸ்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

டிஜிட்டல் கல்விமுறை சாத்தியமா? - மின் புத்தகங்களை வாசிக்க உதவும் திரை வாசிப்பான் கருவியை (screen reader) இவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். அருகில் ஒரு ஒலிபெருக்கி (Speaker) உள்ளது. இதுமளமளவென தேவையான செய்திகளை சொல்கிறது. உணவு ஆர்டர்செய்வது, ரயில் டிக்கெட் பதிவு செய்தல், அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக இணையதளங்கள் வழியாக பொருட்களை வாங்குதல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் இது கைகொடுக்கிறது.

அதனை கேட்டுத் தொடுதல் மூலம் வேகப்படுத்தி எழுத்துகளைத் தட்டச்சு செய்கிறார்கள். வேகமாகக் கேட்கும் இந்த குரல்களை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாது. ஆனால் பார்வையற்ற குழந்தைகள் தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சி வழியாக மிக எளிதாகப் புரிந்து கொள்வதற்கு இந்த கருவிகள் பயன்படுகிறது.

இந்த கருவி குறித்து புத்தகக் காட்சியிலிருந்த நந்தனம் அரசு கல்லூரி பேராசிரியர் ரகுராமனுடன் பேசியதிலிருந்து, சென்னை கிண்டியில், கர்ண வித்யா பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. பார்வையற்றமாணவர்கள் கணிதம், கணினி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பதற்கு இந்த கருவிகளை பயன்படுத்த உரிய பயிற்சிகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. இவ்வாறு கற்பதனால் பார்வையற்ற மாணவர்கள் துணையின்றி சுயமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைக்கூட திறம்பட எழுதும் ஆற்றலைப் பெறுகிறார்கள். இவர்களுக்கென்று உதவியாளர் தேவைப்படுவதில்லை.

மாணவர்களை அதிகாரப்படுத்துதல்: இயல்பாக இருக்கும் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்றால் கணினி, கைபேசி, டேப்லெட் உள் ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பார்வையற்ற அரசு பள்ளி மாணவர் கள் பிரெய்லி புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மாற்றாக இயல்பான மனிதர்களை போல் பார்வையற்ற மாணவர்களும் தொழில்நுட்பங்களை பயன்படுத்திப் பயில Electronic Braille refreshable device ஆர்பிட் ரீடர் (Orbit reader 30) என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியில் மெமரி கார்ட் (Memory card) பதிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிரெய்லி முறையில் படிக்கலாம். இதன் விலை ரூ.38,000 என்பதால் இவ்வளவு விலைகொடுத்து அரசு பள்ளி மாணவர்களால் வாங்க இயலாமல் போகக்கூடும்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது. அதேபோன்று பார்வையற்ற மாணவர்களுக்கும் திறன் பேசி கருவியுடன் கூடிய லேப்டாப், Electronic Braille refreshable device ஆர்பிட் ரீடர் (Orbit reader 30) வழங்கினால் பார்வையற்ற மாணவர்களின் அடிப்படை கல்விக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோன்று இன்று வளர்ந்து வரும் மின்பதிப்பகத்துறையில் பார்வையற்றோருக்கு ஏற்ற வடிவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே புத்தகங்கள் வெளிவந்துள்ளன. புள்ளிவடிவிலான பிரெய்லி புத்தகமாகப் பதிப்பித்து தமிழக அரசும், பதிப்பகத்தாரும் வெளிக்கொண்டு வந்தால் சமத்துவ வாசிப்பு உண்டாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x