Published : 12 Dec 2022 06:02 AM
Last Updated : 12 Dec 2022 06:02 AM

டிங்குவிடம் கேளுங்கள் - 20: குளத்து மீன்களால் கடலில் வாழ முடியுமா?

மீன்களில் பல்வேறு வகைகள் இருப்பதுபோல குளத்து மீனுக்கும் கடல் மீனுக்கும் வித்தியாசம் உண்டா? அதிலும் குளத்து மீன்களால் கடலில் வாழ முடியுமா, டிங்கு?

– தஷ்வந்த், 8-ம் வகுப்பு, இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.

ஆறு, குளம் போன்ற நல்ல நீர்நிலைகளில் வாழும் எல்லா மீன்களாலும் கடலில் வசிக்க முடியாது. அதே போல் கடலில் வாழும் எல்லா மீன்களாலும் ஆறு, குளங்களில் வசிக்க முடியாது. நல்ல நீர்நிலைகளில் வாழும் மீன்கள் உப்பை எவ்வாறு கிரகித்துக்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்தே அவற்றால் கடலில் வாழமுடியும். ஒரு சில மீன்கள் நல்ல நீரிலும் உப்பு நீரிலும் வாழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இவற்றை Anadro mous fish, Catadromous fish என்று இரு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

நன்னீர் நிலையில் பிறந்து, வாழ்க் கையின் பெரும்பகுதியை கடல் நீரில் கழித்து, முட்டைகளை இடுவதற்கு மீண்டும் நன்னீருக்கு வரும் சால்மன் போன்ற மீன்கள் அனட்ரோமோஸ் என்று அழைக்கப்படுகின்றன. கடல்நீரில் பிறந்து, வாழ்க்கையின் பெரும்பகுதியை நன்னீரில் கழித்து, முட்டைகளை இட மீண்டும் கடலுக்கு வரும் ஈல்கள் கேடட்ரோமோஸ் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு சாதாரணமான குளத்து மீனால் கடல் நீரில் தாக்குப் பிடிக்க முடியாது. கடலில் வாழும் மீன்களிலேயேகூட மேல்பரப்பில் வாழும் மீன்களால் கடலின் ஆழத்தில் வசிக்க இயலாது. ஆழத்தில் வசிக்கும் மீன்களால் கடலின் மேற்பரப்பில் வசிக்க முடியாது. காரணம், கடல் நீரின் அழுத்தம், தஷ்வந்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x