

கரோனா காலம் முதல் பெரும்பாலான வேலைகள் ஆன்லைனில் வந்துவிட்டன. இதனால் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இருந்தாலும் அனைத்து வேலைகளும் ஆன்லைனில் வந்துவிடவில்லை. ஃப்ரீலான்ஸ் (freelance) எனச் சொல்லப்படும் ஒரு வேலை முறை படிப்படியாகப் பிரபலமாகி வருகிறது. இந்த வேலை முறையில் நீங்கள் ஒரே ஒரு நிறுவனத்தில்தான் வேலை பார்க்க வேண்டும் என்பதில்லை. திறமையும் அனுபவமும் இருக்கும் பட்சத்தில் சின்ன சின்ன ப்ராஜக்ட்களை செய்து கொடுப்பதன் மூலம்பணம் ஈட்டலாம். உங்களுக்கு உலகம்முழுவதும் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால், உங்களுக்குப் போட்டியாளர்களும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் நீங்கள் ஒரு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் படிக்க வேண்டும், அனுபவம் இருந்தால்தான் உங்களை நம்பி வாடிக்கையாளர்கள் வேலை கொடுப்பார்கள். “சும்மா படித்துவிட்டு ஃப்ரீலான்ஸராக ஆனந்தமாக வேலை பார்க்கலாம், நேரம் காலம் இல்லை மாதிரியான கட்டுப்பாடுகள் கிடையாது, நம்மை மிரட்ட அதிகாரி இல்லை” என்பது போன்ற பொய் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். ஃப்ரீலான்ஸ் என்பது வேலை அனுபவம் உள்ளவர்களுக்கான வேலை முறை. ஒருவேளை நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், இரண்டாம் வருவாயாக ஃப்ரீலான்ஸ் முறையைத் தெரிவு செய்யலாம்.
கணினி தொழில்நுட்பம் முதல், உளவியல், அக்கவுண்டிங், தொழில்நுட்ப கதையாடல் எனப் பல விதமான வேலைகளை நீங்கள்ஃபிரிலான்ஸில் செய்யலாம். ஆனால்,இதற்கான திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். திறனை வளர்க்காமல், கற்றல் இல்லாமல் ஆன்லைனில் வேலை என்பதும், வீட்டிலிருந்தே வேலை என்பதும் ஏமாற்றுதான்.
அடுத்து ஆன்லைன் கருத்துக்கணிப்புகள் பற்றிய புரிதல் அவசியம். பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புக்கள் மூலம் மக்கள் என்னவிரும்புகிறார்கள் எனத் தகவல் சேகரித்து அதன் மூலம் தங்கள் பொருட்களை, சேவையை சிறப்பாக்க முனைவார்கள். அப்படி கருத்துக்கணிப்புகளை ஆன்லைனில் எடுக்க பல நிறுவனங்கள் உதவுகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளில் நீங்கள் பங்கெடுத்தால் உங்களுக்கு ஒரு சிறுதொகையைக் கொடுப்பார்கள். மாணவர்களுக்கு ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கும்.ஆனால், இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் அந்தரங்க தகவல்களை நீங்கள் பகிர்ந்துவிடக் கூடாது. அடுத்து மேலும் சில ஆன்லைன் வேலைகள் அதில் எங்கெல்லாம் கவனம் தேவை என்பது பற்றி பார்ப்போம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்.
தொடர்புக்கு: write2vinod11@gmail.com