திறன் 365 - 21: தெருவில் எழுத்து திறனை வளர்ப்போம்

திறன் 365 - 21: தெருவில் எழுத்து திறனை வளர்ப்போம்
Updated on
2 min read

மொழித்திறன் கற்றலில் கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்ற நான்கு அடிப்படைத் திறன்களில் கடினமானதாகக் கருதுவது எழுதுதல் திறன் ஆகும். அதற்குக் காரணங்கள் பல. குழந்தைகளிடம் உள்ள வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியம் அவர்களின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளைத் திறம்பட வெளிப்படுத்தச் சவாலாக இருக்கிறது. பல குழந்தைகள் எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கண விதிகள் நினைத்து எழுதுவதற்குத் தயங்குகின்றனர். அதனால், ஒத்திசைவான வாக்கியங்கள் அல்லது பத்திகளை எழுத முயற்சிக்கும் போது குழந்தைகள் விரக்தியடைகின்றனர்.

மேலும், வகுப்பறையில் கொடுக்கப்படும் தலைப்புகள், குழந்தைகளின் எண்ணங்களை, யோசனைகளை ஒழுங்கமைக்க சவாலானதாக இருக்கின்றன. சுயமாக எழுதுவதில் கவனம் கொள்ளாமை மற்றும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமைகூட எழுது வதற்குச் சவாலாக அமையலாம். மொத்தத்தில் குழந்தைகள் சொந்தமாக எழுதும் திறன்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். தங்களின் எழுத்துத் திறமையில் நிச்சயமற்றவர்களாக உணரலாம். மேலும், ஆசிரியர்கள், சக குழந்தைகள், பெற்றோர்களின் விமர்சனத்திற்குப் பயப்படுவர்களாக இருக்கலாம். இவற்றை எல்லாம் களைந்து குழந்தைகளைச் சொந்தமாக எழுத வைக்க முடியும். நம்புங்கள்.

சென்ற வருடம், ஐந்தாம் வகுப்பில் படித்த குழந்தைகள் அனைவரும் கதைகளைச் சொந்தமாக எழுதினார்கள். அவர்கள் எழுதிய கதைகள் வாரம்தோறும் செய்தித்தாளில் பிரசுரமாகின. அவைகள் தொகுக்கப்பட்டு ”பாட்டி கதைகள்” என்ற தலைப்பில் புத்தகம் ஆக்கப்பட்டு, வெளி யிடபட்டது. சிறிய முயற்சி. குழந்தைகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தினசரி செய்தித்தாள் வாசித்தலை வகுப்பறையில் ஊக்குவிக்கவும். குழந்தைகளிடம் ஏதாவது ஒருசெய்தியைக் கொடுத்து, அச்செய்திகுறித்து தங்கள் எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகளைக் கூறச் செய்யவும். அதன் பின் ஒவ்வொருவரையும் தனித்தனியாக எழுதஊக்குவிக்கும். இது சரளமாகஎழுதுதல் திறனை மேம்படுத்துவது டன், குழந்தைகளின் சுய வெளிப் பாட்டிற்கு உதவும். படைப்பாற்றல் திறனை வளப்படுத்தும்.

குழந்தைகளை அழைத்து தெருவிற்கு செல்லவும். அத்தெருவினை உற்றுநோக்கச் செய்யவும். தெருவில் கண்ட காட்சிகளை எழுதச் செய் யவும். தனித்தனியாக யாரும் யாரையும் காப்பியடிக்காமல் எழுதச் செய்வது முக்கியம். ஒவ்வொருமுறை எழுதும்போதும் இலக்கண விதிகள், வாக்கிய அமைப்புகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதைத் தெளிவுப்படுத்தி விடவும். அவர் களின் எழுத்திலுள்ள கற்பனை வியப்புக்குள்ளாக்கும். உ.ம்., பாட்டி திண்ணையில் அமர்ந்திருந்தாள். காக்கா மரத்தில் இருந்து கத்தியது. ஆரம்பத்தில், அவள் காகத்தைக் கவனிக்கவில்லை. தொடர்ந்து காகம் கத்தியது. பாட்டி கவலையில் இருந்தாள். மகன் வருவான்.

சமைப்பதற்கு காசு தருவான் என்று காத்திருந்தாள். காகம், “கவலைப்படாதே! பசிக்கிறதா? அருகிலுள்ள பள்ளியில் சத்துணவு போடுவார்கள். பல குழந்தைகள் முட்டைகளைத் தின்னாமல் தூக்கி எறிவார்கள். உனக்கு எடுத்து வந்து தருகிறேன்“ என்றது. காகத்தின் மொழி பாட்டி அறியவில்லை. அது கத்துவது பிடிக்கவில்லை. அதனால், காகத்தை விரட்டினாள். இப்படியான ஒரு சம்பவத்தைக் குழந்தை எழுதித்தரும்போது நாம் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், கற்பனை வளத்தைப் பாராட்ட வேண்டும்.பார்த்த விசயத்தை கதையாக்கிய விதத்தை ரசித்துப் பாராட்டவேண்டும். அதேவேளையில், தனியாக அழைத்துகாகம் கரைந்தது என்று இருந்தால் அருமையாக இருக்கும் என்று பிழையை உணரச் செய்ய வேண்டும். சிவப்பு மையினால் கோடிடக் கூடாது.

பின், எப்படி இலக்கண சுத்தமாக எழுதுவார்கள்? - எழுதும் திறன் வளர்த்தெடுக்க தினமும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். அதனால், குழந்தைகளின் சொற்களஞ்சியம் மேம்படும். வாசிப்பு இலக்கண அறிவை மேம்படுத்தும், வெவ்வேறு எழுத்து நுட்பங்களை அறிமுகம் செய்யும். அதனால், குழந்தைகள் எழுத்தின் பல்வேறு வகைகள், பாணிகளைத் தெரிந்து கொள்வர்கள். அவர்களின் எழுத்து நடை மற்றும் அமைப்பின்மீது கவனம் செலுத்துவர். முயற்சித்து பாருங்கள்.

- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in