

பயம், பதற்றம், பாதுகாப்பின்மை, ஒப்பீடு, தனிமை எனும் பஞ்ச ‘பூதங்கள்’ மாணவர்களின் மனசுக்குள் இருந்தபடி அவர்களை உருக்குலைந்து போக வைப்பவை. வளரிளம் பருவத்தினரை அலைக்கழிக்கக்கூடியவை. மேலும் இந்தப் பிரச்சினைகள் பால்யம் தொடங்கி இறுதிவரை எல்லாருக்குள்ளும் இருக்கக்கூடியவை.
இவற்றைக் கரு வாகக் கொண்டு, ‘உள்ளிருக்கும் கேள்விகள்’ நாடகத்தை ஒசூரில் இருக்கும் டி.வி.எஸ். அகாடமி பள்ளியின் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அண்மையில் நிகழ்த்தினர்.
‘கல்வியில் நாடகம்’ (Theatre-in-Education) என்கிற அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக டி.வி.எஸ். அகாடமி பள்ளிகளில் நாடகவியலாளர் பிரளயன் செயல்பட்டுவருகிறார். இந்த ஆண்டு மாலினி னிவாசன் எழுதியிருக்கும் இந்த நாடகத்தை பிரளயன் இயக்கி இருக்கிறார்.
குழம்பி நிற்கும் நதி
நான் யார் என்பதைக் கண்டறிய யார் நமக்கு உதவப்போகிறார்கள், நான் தோற்றுவிடுவேனா, நான் ஏன் தோல்வியைக் கண்டு அஞ்சுகிறேன், ஏன், என்னைப் பதற்றம் சூழ்கிறது, நான் ஏன் என் மீது அவநம்பிக்கை கொள் கிறேன், நான் ஏன் என்னைப் பிறரோடு ஒப்பிட்டுக்கொள்கிறேன், நான் ஏன் தனித்து விடப்படுகிறேன்... என வளரிளம் பருவத்தினரிடையே எழும் கேள்விகளே நாடகத்தின் மையம்.
பறக்கப் பயப்படும் குருவிக்குஞ்சு, முளைத்தெழத் தயங்கும் விதை, கடலில் கலந்தால் தன் தனித்தன் மையை இழந்துவிடுவேனோ எனக் குழம்பி நிற்கும் நதி ஆகிய சிக்கல் களை மையப்படுத்தி மூன்று கதை களை விவரித்திருப்பது நாடகத்தின் முக்கியமான அம்சம்.
உற்றுக் கவனித்தல்
மேலும், பஞ்சபூதப் பிரச்சினை களில் இருந்து விலகி ஓட நினைக் காமல், அவற்றோடு சண்டையிடாமல், அவற்றை உற்றுக் கவனிக்கத் தொடங்க வேண்டும். அது எப்படி என்பதை நாடகக் காட்சிகள் தொடர்ந்து விவரிக்கின்றன.
தத்துவங்கள் சார்ந்த சிக்கல்கள் மிக்க இந்தப் பிரச்சினைகளை உரையாடல்கள் மூலமும், காட்சிப்படுத்துதல் மூலமும் பார்வையாளர்களையும் கதாப்பாத்திரங்க ளாக்கி நாடகத்தை நகர்த்திச் சென்றி ருப்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் ஒரு கலைக் கொண்டாட்டமாக, அறிவார்ந்த காட்சியனுபவமாக இந்த நாடக நிகழ்வு பார்வையாளர்களை ஆட்கொண்டது. இசையும் பின்னணியில் எல்.இ.டி., திரையில் சூழல் அமைவுக்கு ஏற்ப அவ்வப்போது ஒளிர்ந்த காணொளி நறுக்குகளும் நாடகப் போக்கினைத் தீவிரப்படுத்தி, நாடகக் கருத்தை பார்வையாளர்களுக்குக் கடத்தின.
நவீன நாடகம், வீதி நாடகம், கல்வியில் நாடகம், குழந்தைகளுக் கான நாடகப் பயிற்சி என நாடக வடிவத்தின் பல்வேறு சாத்தியங்களை முயன்றுபார்த்த பிரளயனின் நாடக மாக்கல் குறித்த நுட்பமான புரிதலும் இத்தனை ஆண்டு கால அனுபவமும் இதில் செயலாற்றி இருப்பதை உணர
முடிகிறது. பயணங்களே படிப்பினை யைத் தரும் எனும் உண்மையை உணர்த்தும் விதமாகப் பயணத்தில் உரையாடலைத் தொடங்கி நாடகத்தை நகர்த்தி இருப்பது நல்ல உத்தி.
சுய புரிதல்!
“மதம், அமைப்பு, குரு ஆகியவை உண்மையை அடைவதற்கான வழியைக் காட்ட முடியாது. ஒவ்வொரு வரும் தங்களின் சுய புரிதலால் மட்டுமே உண்மையைக் கண்டறிய முடியும்" என்கிற ஜே.கிருஷ்ணமூர்த்தியின் இந்தக் கூற்றை விவரிக்கும் விதமாக இந்த நாடகம் இருந்தது.
எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் உண்மைத் தன்மை குறித்துச் சிந்திப்பது, புதிய கோணங் களைக் கண்டடைவது வளரிளம் பருவத்தின் இயல்பு. மிகுந்த சிக்கலான தன்மையைக் கொண்ட இந்தக் கதைக்களத்தை வெகு இயல்பாகக் கையாண்டு, கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப உடல்மொழி, முக பாவனைகளை வெளிப்படுத்தி, மிகுந்த ஒன்றுதலோடு பங்களிப்புச் செய்திருந்த மாணவர்களின் அர்ப் பணிப்பு பார்வையாளர்களை வியப் படைய வைத்தது.
‘கூடு பாதுகாக்க, அடைத்துவைக்க அல்ல,’ ‘வானம் அங்கேதான் இருக்கு, மேகங்கள்தான் கடந்து போகின்றன’, ‘கடலில் கலந்த பின்தான் தெரிகிறது, ஆற்றுக்குத் தன் பலம் எவ்வளவு என’, ‘வாழ்க்கையில் இருந்து விலகி ஓடாமல் வாழ்வின் மையத்துக்குத் திரும்புவதே தியானம்’ என்பன போன்ற நம்மோடு பயணிக்கும் வசனங்கள் நிறைய உண்டு.
நாடகத்தின் முடிவில் உரைத்த ஒரு பெண், “பேசுவதற்குத் தயங்கிக் கொண்டு பயத்தோடு இருந்தேன். இந்த நாடகம் என் பயத்தைப் போக்கியது” எனக் கூறியதே நாடகத்தின் வெற்றி.
- கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர்; na.periyasamy@gmail.com