Published : 11 Jul 2022 06:14 AM
Last Updated : 11 Jul 2022 06:14 AM
பெரம்பலூர்: பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிகுரு கோலேப் நிறுவனத்தின் ஓபன்ஸ்பேஸ் ஃபவுண்டேஷன் தன்னார்வ அமைப்பின் சார்பில், மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் அறிவியல் ரீதியான விஷயங்களைக் கொண்டு சேர்த்து ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்கள் இஸ்ரோ விண்வெளி ஆய்வுமையத்துக்கு சுற்றுலா பயணம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கல்வி மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை லட்சுமி தலைமையில், அப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகள் அபிதா,தீபிகா, பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரணவிகா, மாணவர் திருக்குமரன் ஆகியோர் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் உள்ள இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அண்மையில் சென்று வந்தனர்.
அங்கு, 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ராக்கெட்ஏவுதளத்தில் இருந்து வானிலை ஆய்வுக்காக ராக்கெட் ஏவப்படுவதைக் கண்டு மகிழ்ந்தனர்.
மேலும், விண்வெளி அருங்காட்சியகம், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு விண்வெளி பயணங்கள் குறித்து மாணவர்கள் கேட்டறிந்து கொண்டனர். சுற்றுலா சென்று வந்த ஆசிரியை லட்சுமி மற்றும் மாணவ, மாணவிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் அழைத்து, பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியின்போது, வேப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஆலத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT