Published : 28 Oct 2022 06:10 AM
Last Updated : 28 Oct 2022 06:10 AM
மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி பெற உதவிய விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் அடித்த சிக்ஸரை மறக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 82 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்ஸர் மிகவும் அற்புதமானதாக அமைந்தது. இந்த சிக்ஸர் குறித்து இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த சிக்ஸரோடு கோலியின் சிக்ஸரை ஒப்பிட்டு பேசியுள்ளார் கபில்தேவ். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும். மெதுவான பந்துகளில் நேராகசிக்ஸ்ர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல தோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்ஸரையும் நீங்கள் பார்க்கலாம். இந்த சிக்ஸரை ஆயிரம் முறை பார்க்கலாம். தோனியை போல விராட் கோலியும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். விராட் கோலி அடித்த சிக்ஸரை மறக்கவே முடியாது. அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அதைப் போலவே அவர் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT