Published : 27 Oct 2022 06:16 AM
Last Updated : 27 Oct 2022 06:16 AM

கல்விக் கொள்கை பற்றி ஜெகதீப் தன்கர் பெருமிதம்: நாடு வளம் பெற சரியான கல்வி தேவை

ஜெய்ப்பூர்

புதிய கல்விக் கொள்கையால் புதிய திசையில் இந்தியா பயணிக்க உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு நகரில் பிரம்ம குமாரிகளின் இயக்கத்தின் 85-வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பிரம்ம குமாரிகள் அமைப்பு மனித குலத்திற்கு மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது. உலகம் முழுவதும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்ட அவர்களது பணி பாராட்டுக்குரியது. கடந்த காலத்தில் உலகின் குருவாக விளங்கிய இந்தியா, வருங்காலத்தில் மீண்டும் அந்த நிலையை அடையும். நமது கல்வி நிலையங்கள், உலகையே வழிநடத்தும் நிலைக்கு உயா்ந்து வருகின்றன. உலக வரலாற்றில் இந்தியாவைபோல உண்மை மற்றும் அமைதிக்கான தத்துவத்தை வேறெந்த நாடும் வழங்கியதில்லை. உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இப்போது உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாட்டின் கலாசாரம், சிந்தனைகள், பாரம்பரியம் ஆகியவற்றை மனதில் கொண்டு, புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியக் கூறாக கல்வியும், பாரம்பரியம் மற்றும் மூலதனமாக மதமும் விளங்கு கிறது. சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே நமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும். நமது நாடு ஆற்றலும் வளமும் பெற சரியான கல்வி அவசியம். அந்த அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையால் புதிய திசையில் இந்தியா பயணிக்க இருக்கிறது. கரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியா சேவையாற்றியது. ஆன்மிகம், மனிதாபிமானம், சேவையில் உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டுகிறது. இவ்வாறு ஜெகதீப் தன்கர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x