Published : 23 Sep 2022 06:05 AM
Last Updated : 23 Sep 2022 06:05 AM

அரசு பள்ளிகளில் இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் கலையில் பயிற்சி; வாரம் 2 பாடவேளைகள்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் கலையில் பயிற்சி அளிக்க வாரத்தில் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கலைத்திறன் களை வெளிக்கொண்டு வருவதற்காக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை அரங்கம்நிகழ்வின் கீழ் கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்படும். கலை செயல்பாடுகளுக்காக வாரத்தில் ஒரு நாள் கடைசி 2 பாடவேளைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

இசை, நடனம், காட்சிக் கலை, நாட்டுப்புறக் கலை, நாடகம் ஆகிய ஐந்து கலை வடிவங்களுக்கான கலைஞர்களை தேர்வு செய்தல், அவர்களை பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுடன் இணைத்தல், 5 கலை வடிவங்களுக்கான பாடத்திட்டம் தயாரித்து, பள்ளிகள் மற்றும்கலைஞர்களுடன் உரிய நேரத்தில்பகிர்தல், கலை அரங்க நிகழ்வுகளுக்காக செல்போன் செயலியை வடிவமைத்து பள்ளிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் தற்போது ஒருங்கிணைப்படுகின்றன.

நாட்டுப்புறக் கலைஞர்கள், பயிற்சியாளர்கள், கலை நெறியாளர்கள், வல்லுநர்கள், கலை தொடர்பான அரசுநிறுவனங்கள் போன்ற வளங்கள், பள்ளி, குறு வளமையம், வட்டாரம் அருகில் உள்ள கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து பயிற்சி அளிக்கும் வகையில் மாநில அளவில் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த கலை வடிவத்தை தேர்வு செய்ய ஆசிரியர்கள் உதவ வேண்டும். அதனடிப்படையில் குழந்தைகள் குழுவாகப் பிரிக்கப்பட்டு வகுப்பு வாரியான பட்டியல் தயாரித்து, பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆசிரியர் பொறுப்பாளராக இருக்க வேண்டும்.

இசை பிரிவில் தமிழ் இசை, நாட்டுப்புறக் கலையில் உடுக்கை, பறை, ஒயில், கரகாட்டம், கும்மி, பிறகலைகள், நடனம் பிரிவில் நாட்டியம், மயிலாட்டம், தேவராட்டம், பரத நாட்டியம், இதர கலைகள், நாடகம் பிரிவில் பொம்மலாட்டம், தோல் பாவைக்கூத்து, தெருக்கூத்து உள்ளிட்ட கலைகள், காட்சிக் கலை பிரிவில் புகைப்படம் எடுத்தல், குறும்படம் எடுத்தல், வரைதல், ஓவியம், களிமண் வேலை உள்ளிட்டவற்றில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சூழல்மற்றும் கலைஞர்களின் அடிப்படையில் பள்ளி அளவில் 2 அல்லது 3 கலை வடிவங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக இக்கலை அரங்க நிகழ்வுகள் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் தொடங்கவுள்ளது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 22 மாவட்டங்களில் அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்கும்.

டிசம்பர் முதல் வாரத்தில் இருந்துபல்வேறு கலை வடிவங்கள் சார்ந்துபோட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்படும். பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x