Published : 23 Sep 2022 06:35 AM
Last Updated : 23 Sep 2022 06:35 AM

திமுக மாவட்டச் செயலர் தேர்தலுக்கு மனுதாக்கல் தொடக்கம்: பல்வேறு மாவட்டங்களில் கடும் போட்டி

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன் தனது வேட்புமனுவை, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரிடம் வழங்கினார். படம்: ம.பிரபு

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர் தேர்த லுக்கான மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அமைச்சர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் தவிர மற்றமாவட்டங்களில் இப்பதவிக்கு கடும்போட்டி நிலவுகிறது.

திமுகவில் அமைப்பு ரீதியான 15-வது பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கிளைக் கழகங்கள், தொடர்ந்து பேரூர், நகரம், பகுதி, மாநகர நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் நடந்தன.மாவட்டச் செயலாளர்கள், அவைத்தலைவர், துணை செயலாளர்கள்,பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனுதாக்கல் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை உட்பட 19 மாவட்டங்களுக்கு போட்டியிடுவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரூ.1,000 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டனர். அதை பூர்த்தி செய்து, ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 ஆயிரம் செலுத்தி மனுக்களை தாக்கல் செய்தனர். அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு - அமைச்சர் கீதாஜீவன், கன்னியாகுமரி மேற்கு - அமைச்சர் மனோ தங்கராஜ், விருதுநகர் வடக்கு - தங்கம் தென்னரசு, தெற்கு - சாத்தூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் மேற்கு - அர.சக்கரபாணி என அமைச்சர்கள் போட்டியிடும் மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். தேனி வடக்கு மாவட்டம் - தங்கதமிழ்ச்செல்வன், தென்காசி தெற்கு -சிவபத்மநாபன், திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப், திருநெல்வேலி கிழக்கு - சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அமைச்சர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி உள்ளது. 72 மாவட்டங்களுக்கான மனு தாக்கல் வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் நேற்று பகல் 12 மணி அளவில் அறிவாலயம் வந்து, மாவட்டச் செயலாளர் தேர்தல் தொடர்பாக நேரு, ராசா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். மனு தாக்கல் செய்ய வந்திருந்தவர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x