Published : 15 Jul 2022 06:50 AM
Last Updated : 15 Jul 2022 06:50 AM

குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல் குழந்தைகள் வளர்ச்சிக்கான கல்வி

ஹைதராபாத்: குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் உதவும் வகையில் கல்வி அமைய வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தெலுங்கு அறிஞரும் இலக்கியவாதியுமான கரிகிபதி நரசிம்மராவுக்கு ‘ஆக்ரிதி’ என்ற கலாச்சார அமைப்பால் நிறுவப்பட்ட ‘சன்ஸ்கார்’ விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.

தெலுங்கு மொழிக்கான இலக்கிய பங்களிப்புக்காகவும் ஆன்மிக போதனைகளுக்காகவும் கரிகிபதி நரசிம்மராவை வெங்கய்யா நாயுடு பாராட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் உதவும் வகையில் கல்வி அமைய வேண்டும். இதற்கு முழுமையான மதிப்பு அடிப்படையிலான கல்வி அவசியம். கல்வி ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. நல்லொழுக்கத்தையும் உயர்ந்த ஞானத்தையும் கற்பிக்கிறது. நாளைய இந்தியா மாணவர்களின் கையில் உள்ளது. எனவே மாணவர்கள் கல்வியை அக்கறையோடு கற்றுத் தேற வேண்டும்.

கல்வி என்பது வெறும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் அல்ல. நமது கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை உள்ளடக்கியதாக கல்வி இருக்க வேண்டும். நமக்கு ஞானத்தையும் கல்வியையும் வழங்குபவர் குரு. இந்திய பாரம்பரியத்தில் குருவுக்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்படுகிறது. தாய், தந்தைக்கு பிறகு மிக உயர்ந்த இடம் குருவாக விளங்கும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் நமது மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள்.

அறிவைக் கற்றுக் கொடுக்கும் அதேநேரத்தில் நல்லொழுக்கத்தையும் உயர்ந்த குணங்களையும் நமது பண்பாட்டு விழுமியங்களையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு வெங்கய்யா நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x