Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

இணையவழியில் டிசம்பர் 21 முதல் அரியர் பாடங்களுக்கான முன்னேற்றத் தேர்வு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை

அரியர் மாணவர்களுக்கான முன்னேற்றத் தேர்வுகள் டிச.21-ம் தேதி முதல் இணையவழியில் நடத்தப்படும் என்று சென்னைபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாதொற்று காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பின் அரியர் பாடத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்

அதன்படி தேர்வுக்கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 9,518 அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கடந்த அக்.27-ம் தேதி சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் தரப்பட்டது.

அதேநேரம் அகமதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சில பாடங்களில் தேர்ச்சி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மேலும், மதிப்பெண் கூடுதலாக தேவைப்படும் மாணவர்களும் முன்னேற்ற தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று சென்னைபல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு பருவத்தேர்வு டிச.21 முதல் ஜனவரி 6-ம் தேதி வரை இணையவழியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வின்போதே அரியர் மாணவர்களுக்கான முன்னேற்றத் தேர்வும் நடத்தப்பட உள்ளது.

கல்லூரி வழியாக விண்ணப்பம்

இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரி வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதவிர ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற அரியர் அல்லாத பிறமாணவர்களும் கூடுதல் மதிப்பெண்கள் தேவை எனில் நடப்புபருவத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஏற்கெனவே அரியர் வைத்திருந்து கடந்த ஏப்ரல் - மே மாத பருவத்தின்போது தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் தற்போது அரியர் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x