Published : 09 Sep 2020 09:00 PM
Last Updated : 09 Sep 2020 09:00 PM

அரியர் தேர்வுகள் ரத்து; தமிழக அரசின் முடிவு தவறானது: ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே

அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கருத்துத் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஆக.26-ம் தேதி அறிவித்தார்.

இதில் தேர்வுக்குத் தயாராகி, விண்ணப்பக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ''25 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பது என்பது ஏற்புடையதல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் அகாடமிக் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் தமிழக அரசு தலையிட்டு அறிவிப்பை வெளியிட முடியாது. எனவே இது தொடர்பான அரசாணைக்குத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவும் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி என்பதை ஏற்க முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இதுகுறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே, அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது. அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கியது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் இதைத் தெரிவித்துள்ளேன்.

அரியர் தேர்வு குறித்துத் தமிழக அரசுத் தரப்பில் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. எனினும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அரியர் வழக்கு விசாரணையின்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்'' என்றார் ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x