Published : 15 Oct 2019 03:22 PM
Last Updated : 15 Oct 2019 03:22 PM

அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மனிதவளத் துறை அமைச்சகம் 2017-ல் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின்படி, தலா 10 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி நிதியுதவியும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்படும். அதன்படி, சென்னை ஐஐடி, வேலூர் விஐடி உட்பட தலா 8 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர மாநில உயர் கல்வி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகமும் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு அந்தஸ்து பெறும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு நிதியை மத்திய அரசே வழங்கும். மாநில உயர் கல்வி நிறுவனங்களுக்கு 75:25 விகிதத்தில் நிதியை மத்திய, மாநில அரசுகள் பங்கிட வேண்டும். அதாவது ஆயிரம் கோடி ரூபாயில் மாநில அரசு ரூ.250 கோடி நிதியை அளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், ''அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. அதேபோல, மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா கூறும்போது, ''அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அது மத்திய அரசுக்குச் சொந்தமானதாக மாறிவிடாது. இதுதொடர்பாக சிலர் தேவையில்லாமல் பயப்படுகின்றனர். மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் பல்கலை. இயங்கும்.

தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறையாது. இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x