Published : 15 Oct 2019 10:59 AM
Last Updated : 15 Oct 2019 10:59 AM

மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு தேர்வுகள் நடத்தக் கூடாது: தேசிய கல்வி, ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்

புதுடெல்லி

எல்கேஜி, யூகேஜி போன்ற மழலையர்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக்கூடாது என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து என்சிஇஆர்டி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் வேலை, மழலையர் பள்ளி குழந்தைகளை தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர் என்று அடையாளப்படுத்துவற்கு இல்லை. அப்படி குழந்தைகளை அடையாளப்படுத்தினால் அவர்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு மந்த நிலைக்கு செல்கிறார்கள்.

இதற்கு பல பெற்றோர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். எனவே, கல்வி முறையில், எவை எல்லாம் செய்யக்கூடாது, செய்யக் கூடியது என்று என்சிஇஆர்டி வரையறை செய்துள்ளது. அதன்படி, மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எந்தவொரு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக் கூடாது.

அதில், குழந்தைகளுக்கு, சமூகத்தோடு எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்து பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சுருக்கமாக எழுத, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆனால், நமது நாட்டில் உள்ள பல மழலையர் பள்ளிகள், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் மற்றும் ஆங்கிலத் திறன் அறிவு தேர்வு முறைகளை வைத்துள்ளது. ஒரு குழந்தையின் தொடக்கக் கல்வி செல்லும் வரை, அவர்களுக்காக ஒரு கோப்பு உருவாக்கி, அதை பெற்றோர்களின் கவனத்தில் வைக்கவேண்டும்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் அறிக்கையை ஆண்டுக்கு 2 முறையாவது பள்ளிகளில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல், பிரி ஸ்கூலின் உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை முறைகள் மற்றும் வருகைப்பதிவேடு, கண்காணிப்பு போன்றவற்றுக் கும் என்சிஇஆர்டி வரையறை செய் துள்ளது என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x