Last Updated : 19 Jan, 2024 05:03 AM

 

Published : 19 Jan 2024 05:03 AM
Last Updated : 19 Jan 2024 05:03 AM

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு சென்னையில் இன்று தொடக்கம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு களமிறங்குகிறது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் நாளை (19ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டுகளில் இடம்பெறுகிறது. அதே வேளையில் ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது.

சொந்த மண்ணில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பில் 522 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது. தமிழக வீரர், வீராங்கனைகள் 26 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு, புனேவில் நடந்த இரண்டாவது பதிப்பில் 88 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தனர்.

இம்முறை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழக அணியின் செஃப்-டி-மிஷன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளார் ஜே.மெர்சி ரெஜினா உள்ளார். அவர் கூறும்போது, “இம்முறை 100 பதக்கங்கள் வரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அடிமட்ட அளவில் இருந்து திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதில் தமிழக அரசு அதிக முதலீடு செய்து வருகிறது.

நாங்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதை வீரர்கள் வெளிக்காட்டும் திறன்கள் வழியாக காணமுடிகிறது. டபிள்யூபிடிடிஎஸ் (உலகத் திறனாளர்களைக் கண்டறிதல்) திட்டத்தின் கீழ் 27 விளையாட்டு விடுதிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு விடுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தேசியதரவரிசையின் அடிப்படையில் நாங்கள் களமிறக்கக்கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது. ஆனால்இந்த முறை போட்டியை நடத்து பவர்களாக நாங்கள் இருப்பதால் பெரிய குழுவை களமிறக்கி உள்ளோம். பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்கு நாங்கள் வரமுடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

தடகளம், நீச்சல், பளுதூக்குதல், வாள்வீச்சு மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவற்றில் பெரும்பாலான பதக்கங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு கருதுகிறது. அதேவேளையில் கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து போன்ற குழுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வெல்லும் போட்டியாளர்களாக தமிழ்நாடு இருக்கக்கூடும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் ஸ்குவாஷ் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் பதக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டுகளில் பங்கேற்கும் தமிழக அணிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதே நேரத்தில் தனிநபர் விளையாட்டுகளில் சிறந்த வீரர்கள் ஒடிசாவில் உள்ள சிறப்பு மையம், குஜராத் உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையங்களில் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

வியாழக்கிழமை (நேற்று) கபடி போட்டிகள் தொடங்கிய நிலையில், வாள்வீச்சு மற்றும் ஜிம்னாஸ்டிக் அரங்கில் இருந்து வார இறுதியில் பதக்க அணிவகுப்பைத் தொடங்க தமிழ்நாடு அணியின் வீரர், வீராங்கனைகள் முயற்சிக்கக்கூடும்.

தமிழ்நாடு வாள்வீச்சு பயிற்சியாளர் ஜிஜோ நிதி கூறும்போது, “சமீபத்தில் முடிவடைந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப்பில் தமிழக அணி சிறப்பாக செயல்பட்டிருந்தது. அந்த போட்டியில் 4 தங்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தோம். இதைவிட கூடுதலாக இரு பதக்கங்களை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் என்.வி.ஜெனிஷா, அர்லின், ஜே.எஸ்.ஜெபர்லின் ஆகியோர் மீது அதிக நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஜிம்னாஸ்டிக்ஸில் ஓசியானா ரெனீ தாமஸ் பதக்கம் வெல்லக்கூடியவராக திகழ்கிறார். அவர், ஜூனியர் தேசிய போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் ஓசியானா ரெனீ தாமஸ், ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் ஒட்டுமொத்த பிரிவிலும், தனிநபர் அப்பேரட்டஸ் பிரிவிலும் பங்கேற்கிறார். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் பிரதீப் கூறும்போது, “ எங்கள் வீரர்கள் மிகச் சிறப்பாக தயாராகி உள்ளனர். ரிதம்மிக் ஜிம்னாஸ்டிக்ஸில் 2-3 பதக்கங்களை வெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதை வீரர்கள் வென்று கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x