

மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த மூன்று குரங்கு பொம்மைகள் பற்றி நினைவிருக்கிறதா? சீன நாட்டிலிருந்து வந்த ஒருவர் இந்த பொம்மைகளை, காந்திக்கு பரிசாக தந்தாராம். தனது குருவாக எண்ணி அவற்றை பாதுகாத்து வந்ததாகவும், மிக உயர்ந்த தத்துவங்களை இவை உணர்த்துவதாகவும் காந்தி கூறுவார்.
அப்போதெல்லாம் எல்லாப் பள்ளிகளிலும் காந்தி அடிகளின் புகைப்படத்திற்கு கீழே இந்த மூன்று பொம்மைகளும், பள்ளிக்குள் நுழைந்தவுடன் மாணவர்கள் கண்ணில் தெரியும் வகையில் வைக்கப்பட்டிருக்கும். கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக் கொண்டிருக்கும் அந்த குரங்கு பொம்மைகளின் கீழே “தீயதைப் பார்க்காதே…தீயதைக் கேட்காதே…தீயதைப் பேசாதே…” என்று எழுதப்பட்டிருக்கும். நல்லவற்றை மட்டுமே சிந்திக்கவும், பேசவும் வேண்டும் என்ற எண்ணத்தை, எப்போதும் இவை உணர்த்திக் கொண்டே இருக்கும்.
தீயவற்றைப் பார்க்காமலும், தீயவற்றை பேசாமலும், தீயவற்றை கேட்காமலும் இருக்க வேண்டுமெனில், அதற்குப் பதிலாக நல்லவற்றைக் கேட்பதற்கும், நல்லவற்றைப் பார்ப்பதற்கும், நல்லவற்றைப் பேசுவதற்கும் வாய்ப்புகள் இருக்க வேண்டும், அல்லது அவை உருவாக்கப்பட வேண்டும்.
நல்லவைகளை மட்டும் பேச வேண்டும் என்றால் மனதிற்குள் நல்ல சிந்தனைகள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தக் காலத்து குழந்தைகளின் சிந்தனை, மிகப் பெரிய அளவில் தீமைகளால் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு அன்றைய சூழல்தான் காரணம்.
வானொலி, தொலைக்காட்சி என்ற அனைத்து தொலைத் தொடர்பு ஒளிபரப்புகளிலும் தணிக்கைச் சான்று பெறப்பட்டவை மட்டுமே இடம் பெறும். எதிர்மறை சிந்தனைகளை தூண்டக்கூடியவற்றை இடக்கரடக்கல் (இலைமறை காயாக) முறையில் தான் வெளிப்படுத்துவர்.
அதாவது, சொல்லத்தகாத அநாகரிகமான சொற்களை பலர் இருக்கும் இடத்தில் பேசாமல், அதை அடக்கி வேறு சொல் மூலம் தெரியப்படுத்துவார்கள். அதனால் அந்தக் காலத்து குழந்தைகளும், சிறு வயதிலேயே அந்தப் பக்குவத்தை பெற்று, எவற்றை, எப்போது, எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தனர்.
ஆனால், பிறரை கேலி செய்து பேசுதல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பெரியவர்களை அவமரியாதை செய்தல் போன்றவைதான் இன் றைய பெரும்பான்மையான குழந்தைகளின் இயல் பாக உள்ளது. இன்றைய தொலைத் தொடர்பு சாதனங் களான வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகியவை பல்வேறு விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவற்றில் நல்லவற்றை சலித்து எடுக்க தெரியாமல், பல குழந்தைகள் தவறான வார்த்தைகளை சகஜமாக பயன்படுத்துகின்றனர்.
இன்டர்னெட் என்பதில் எந்த அளவிற்கு நல்ல தகவல்கள் அடங்கி உள்ளனவோ, அதே அளவிற்கு தீய தகவல்களும் அடங்கி உள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. குழந்தைகள் நம் அருகில் இருக்கும்போது, எதை ரசிக்கிறார்கள், எதற்கு சிரிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். சிறு வயதிலேயே, அவர்களின் ரசனையை நெறிப்படுத்த முயற்சிக்க வேண்டும். இடக்கரடக்கல் என்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகள் எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுமாறும், வெளிப்படையாக மனம்விட்டு பேசும் வகையிலும் பெற்றோர் இருக்க வேண்டும். குழந்தைகள் பார்க்கின்ற, கேட்கின்ற, பேசுகின்ற அனைத்தையும் கவனிக்க வேண்டும். நேரம் இல்லை என்ற காரணம் கூறி, குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்காமல் விடுவது மிகத் தவறு. தவறு செய்வதை கவனிக்க நேரும் தருணங்களில், உடனடியாக அவர்களைக் கண்டிக்காமல், பொறுமையுடன் கூறி புரியவைக்க முயற்சிக்க வேண்டும்.
சிறு வயதிலேயே நல்ல சிந்தனை, நல்ல பேச்சு, நல்ல பார்வை ஆகியவற்றை அவர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் நமது நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் சாலப் பொருந்தும். வருங்கால சந்ததி நேர்மறை எண்ணங்களோடு திகழும் வகையில், மிகச் சிறந்த முன்னுதாரணமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கட்டுரையாளர் தலைமையாசிரியர் அரசினர் உயர் நிலைப் பள்ளி திருக்காலிமேடு,காஞ்சிபுரம் மாவட்டம்