Published : 25 Jan 2023 06:11 AM
Last Updated : 25 Jan 2023 06:11 AM

காலியாக உள்ள பட்டியலின மாணவர் இடங்கள் டெல்லி பல்கலை.க்கு அரசு கடிதம்

புதுடெல்லி: மாணவர் சேர்க்கையின் போது பட்டியலின மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கட்-ஆஃப் மதிப் பெண்ணை குறைக்குமாறு டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங்குக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.

முதன்முறையாக பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) மதிப்பெண்கள் மூலம் டெல்லி பல்கலைக்கழகம் நடத்திய இளங்கலை சேர்க்கை டிசம்பரில் முடிவடைந்தது. ஆனால் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் மொத்தம் உள்ள 70,000 இடங்களில் ஆயிரக் கணக்கான இடங்கள் நிரம்பவில்லை.

இதற்கிடையில் சேர்க்கையை மீண்டும் நடத்தும் திட்டத்துக்கு துணைவேந்தர் மறுப்பு தெரிவித்தார். முதல் செமஸ்டர் தற்போது முடிவடைய உள்ளதால், புதிய மாணவர்களைச் சேர்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், பட்டியலின மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து டெல்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி டெல்லி எஸ்சி, எஸ்டி நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், துணைவேந்தர் யோகேஷ் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டில், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுபடி, பட்டியலின மாணவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஏனெனில், இந்த ஆண்டு இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் அல்லது ரேங்க் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

முன்னதாக, டெல்லி பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பட்டியலின இடங்கள் காலியாக இருந்தால் கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டு இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தரமான கல்வி

முதல்வர் அர்விந்த் கேஜரிவால் தலைமையிலான டெல்லி அரசு, தரமான கல்வியை வழங்க உறுதிபூண்டுள்ளது. பட்டியலின மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைப்பதன் மூலம் காலிஇடங்களை நிரப்ப பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு சேர்க்கை நிபந்தனைகளைத் தளர்த்தவும், சிக்கலை மறுபரிசீலனை செய்யுமாறும் டெல்லி அரசு சார்பில் டெல்லி பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x