Published : 27 Aug 2020 04:47 PM
Last Updated : 27 Aug 2020 04:47 PM

நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் நாளை போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆக.28-ம் தேதி (நாளை) போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது.

நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும் கடந்த வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆக.28-ம் தேதி (நாளை) போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கோவிட் பெருந்தொற்று சூழலில் தேர்வுகளை நடத்தும் அரசின் முடிவு மாணவர்கள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் சர்வாதிகார நடவடிக்கை இது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரியுள்ளனர்.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பிரிவுகள் சார்பில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் போராட்டம் நடைபெற உள்ளது. மாநிலம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்படும்.

அனைத்துப் போராட்டங்களும் சமூக இடைவெளி விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தே நடைபெறும். அதேபோலக் கட்சி சார்பில் ஆன்லைன் போராட்டமும் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து சமூக வலைதளங்களில் தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரிப் பதிவுகள் இடப்படும். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் #SpeakUpForStudentSaftey என்ற ஹேஷ்டேகில் பதிவுகளைப் பகிரலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்திய அரசின் முடிவால் 25 லட்சம் மாணவர்களின் உடல்நலனும் பாதுகாப்பும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x