Published : 27 Aug 2020 03:49 PM
Last Updated : 27 Aug 2020 03:49 PM

மதுரை வேளாண்மை கல்லூரியில் தொலைதொடர்பு கல்வி வகுப்புகள் தொடங்கப்படுமா?- ஒரு பாடப்பிரிவுக்கு 20 மாணவர்கள் சேர்ந்தால் வாய்ப்பு பிரகாசம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைத்தொடர்பு கல்வி இயக்ககத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 20-க்கும் குறையாமல் மாணவர்கள் சேர்ந்தால் மதுரை வேளாண்மை கல்லூரியிலேயே தொலைத்தொடர்பு கல்வி தொடங்கப்பட்டு தென் தமிழக மாணவர்கள் படித்து பயன்பெறலாம்.

ப்ளஸ்-டூ தேர்வுகள் முடிந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடக்கின்றன. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதொடர்பு கல்வி இயக்கத்திலும் தற்போது இந்த ஆண்டுக்கான (2020-2021) மாணவர் சேர்க்கை நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககத்தில் ஏற்கெனவே 9 முதுநிலை பட்டயப் படிப்புகளும், 18 சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகிறது.

கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் மேலும் புதிதாக 30 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டன.

தற்போது உரக்கடை, மருந்துக்கடை போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள் நடத்துவோர் அவசியம் வேளாண் பட்டயப்படிப்புகளை படித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதனால், இப்படிப்புகளை விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் படித்து பயன்பெற்று வருகின்றனர். இந்த படிப்புகள் அனைத்தும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மட்டுமே உள்ளன.

மதுரை வேளாண்மை கல்லூரியில் நேரடி வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கக பாடங்கள் நடத்தப்படுவதில்லை.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 20-க்கும் குறைவில்லாமல் மாணவர்கள் இந்த படிப்புகளில் சேர்ந்தால் தென் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மதுரை வேளாண்மை கல்லூரியிலேயே இந்த தொலைதூர கல்வி இயக்கக படிப்புகளைப் படித்து பயன்பெறலாம்.

அதற்காக வகுப்புகள் இந்த கல்லூரியிலே தொடங்கப்பட பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் தினமும் கல்லூரி வர வேண்டிய அவசியம் இல்லை. மாதத்தில் சணி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் வந்தாலே போதுமானது.

இதுகுறித்து மதுரை தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற் ஆராய்ச்சிநிலையத்தின் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைத்தொடர்பு கல்வி இயக்கத்தில் (2020-2021) மாணவர் சேர்க்கை தொடங்கி நடக்கிறது.

இதில், குறிப்பாக சான்றிதழ் பாடம் (Certificate Courses), பட்டய படிப்புகள் (Diplomo Courses), வேளாண் இடுபொருள்களுக்கான சிறப்பு சான்றிதழ் பாடம் (Special Certificate Courses) மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diplomo Courses) என பல பாடப்பிரிவுகள் உள்ளன.

பாடத்தின் சிறப்புகள், கால அளவு, கட்டணம் ஆகியனவற்றைத் தெரிந்து கொள்வதற்கான தொடர்பு எண்கள் (0422 -6611229, 9442111057 / 9442111048 / 9489051046) பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

காலை 9.15 முதல் மாலை 4.45 வரை மாணவர்கள் தஙகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

7904310808 என்ற எண்ணில் மதுரை வேளாண் அறிவியல்நிலைய அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறியலாம்.

ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் குறைந்தபட்சம் 20 மாணவ மாணவியர், விவசாயிகள், பெண்கள் என தென் மாவட்ட இளைஞர்கள் சேர்ந்தால், மதுரை மாவட்டத்திற்கான வாராந்திர வகுப்புகள் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்படுத்த பல்கலைக்கழகம் உரிய அனுமதி வழங்கும். ஆகையால், அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x