Published : 27 Aug 2020 01:50 PM
Last Updated : 27 Aug 2020 01:50 PM

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதியாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்: அசத்தும் மதுரை பள்ளி

தலைமை ஆசிரியர் எஸ். வீ.ராமநாதன்

மதுரை

மதுரையில் தியாகராசர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் சேரும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதியாக விலையில்லா ஆண்ட்ராய்டு செல்போன்களை ஆசிரியர்கள் வாங்கிக் கொடுத்து அசத்தி வருகின்றனர்.

கரோனாவால் மக்களுடைய வாழ்வாதாரம் சிதைந்தது மாணவர்களுடைய கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக பள்ளிகள் திறக்கப்படாததால் இந்தக் கல்வி ஆண்டு முதல் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு போன் அடிப்படை தேவையாகிறது.

அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுடைய குழந்தைகள்தான் படிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் இல்லை.

அதனால், அவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறையைப் போக்க மதுரை பழங்காநத்தம் வசந்த நகரில் உள்ள அரசு உதவி பெறும் தியாகராசர் இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப்பில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதியாக ஆசிரியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுக்கின்றனர்.

இந்தப் பள்ளி 1959ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் ப்ள-டூ வரை தற்போது 206 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

ஆசிரியர்களின் இந்த ஆண்ட்ராய்டு செல்போன் அறிவிப்பால் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் எஸ். வீ.ராமநாதன் கூறுகையில், ‘‘நேற்றுதான் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தோம்.

அது முதல் மாணவர் சேர்க்கை ரொம்ப வேகமாக கூடிக் கொண்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு செல்போன் அறிவிப்பு ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றாலும், ப்ளஸ்-டூ மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு செல்போன் இல்லாவிட்டால் அதை வாங்கிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

தற்போது கற்பித்தலுக்கு ஆண்ட்ராய்டு போன் அவசியமாகிறது. அதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏதோ மாணவர் சேர்க்கைக்காக மட்டுமே இந்த அறிவிவிப்பை வெளியிடவில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையாக எங்கள் பள்ளியில் சேரும் குழந்தைகளும் கல்விக்கான அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி கல்வியை தடையில்லாமல் கற்கவே இந்த ஏற்பாடுகளை செய்கிறோம். மேலும், இந்த அறிவிப்பு வெளியிட இன்னொரு காரணமும் இருக்கிறது.

கடந்த ஜூன் முதலே எங்கள் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். அதைபார்த்துவிட்டு மாணவர்கள் ஆசியர்கள் கொடுக்கும் வீட்டுபாடங்களை செய்து அவர்கள் ஆசிரியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அதை ஆசிரியர்கள் சரி செய்து அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அப்போது மாணவர்கள் பலர் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்க பட்ட சிரமங்களை கண்கூடாக பார்த்தோம். அந்த கஷ்டங்களை எங்களிடம் படிக்கும் மாணவர்கள் படக்கூடாது என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதிய உணவின் தரத்தை நான் சரிபார்த்த பிறகே மாணவர்கள் சாப்பிடுவார்கள்..

தலைமை ஆசிரியர் எஸ். வீ.ராமநாதன் மேலும் கூறுகையில், ‘‘எங்கள் பள்ளியில் மதிய உணவு வழங்குவதில் ஒரு நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். தினமும் மதியம், மாணவர்களுக்காக சமைக்கப்படும் மதிய உணவை நான் சாப்பிட்டு ருசிபார்த்த 15 நிமிடங்கள் கழித்தே அவர்களை சாப்பிட அனுமதித்து வருகிறோம்.

ஏனென்றால் அந்த சாப்பிட்டின் தரம் எப்படியிருக்கிறது என்பதை ஆய்வு செய்ய முடிகிறது. மேலும், அந்த உணவில் எதாவது பாதிப்பு இருந்தால் மாணவர்கள் அதை சாப்பிடாமல் தடுக்கவும் முடிகிறது. மேலும், பள்ளியில் வைக்கப்படும் மரச்செடிகளை மாணவர்களே வளர்க்கிறார்கள்.

அவர்கள், வீட்டில் இருந்து 2 வாட்டர் பாட்டில்கள் கொண்டு வருவார்கள். ஒன்று அவர்கள் குடிப்பதற்கும், மற்றொன்று மரச்செடிகளுக்கு ஊற்றுவதற்கும் எடுத்து வருகிறார்கள். மாணவர்கள், இப்படி ஒவ்வொரு மரத்தையும் இது என்னுடைய மரம் என்று பெயர் சொல்லி வளர்க்கிறார்கள். அதனால், மாணவர்கள் மரம் வளர்ப்பின் அவசியம் பற்றி புரிய வைக்கிறாம். பள்ளி வளாகமும் பசும்சோலையாக காணப்படுகிறது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x