Published : 31 Dec 2021 08:26 AM
Last Updated : 31 Dec 2021 08:26 AM
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொள்வதுபோல தனியார்தொலைக்காட்சி தொடரில் காட்சி அமைத்து, சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதற்கு எதிர்ப்புதெரிவித்து, சென்னை பட்டாபிராமை சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது கவுஸ் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பினார். அதில் கூறியிருந்ததாவது:
கடந்த சில மாதங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்வது போல காட்சியமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை புகார்களை உடனடியாக தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்களை தமிழக அரசு வழங்கி வலியுறுத்திவருகிறது. மேலும், வன்கொடுமைக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்கிறது.
இந்த சூழ்நிலையில் தொலைக்காட்சி தொடரில் மாணவி தற்கொலை செய்து கொள்வது போலகாட்சிப்படுத்தியது கண்டத்துக்குரியது. இத்தகைய காட்சிகள் மாணவிகளிடம் உள்ள தன்னம்பிக்கையை உடைத்து தற்கொலைக்கு தூண்டும் வகையில்உள்ளன. எனவே, இதுபோன்றகாட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். தொலைக்காட்சி மற்றும் தொடரின் இயக்குநர்மீது நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஆன்லைனில் அளித்த புகாரைநேற்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் அளித்தார். இதுகுறித்து மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டிராய் மற்றும் மத்தியஒலிபரப்பு அமைச்சகத்துக்கும் அவர் புகார் அனுப்பியுள்ளார்.
தற்கொலை தீர்வல்ல
‘உணர்ச்சிப் பூர்வமான பிரச்சினைகள் மட்டுமே தற்கொலைக்கு முதல் காரணம். இன்றைய இளம்தலைமுறையினர் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் பிரச்சினைகளை சமாளிக்க, அதை எதிர்கொள்ள, திறமையுடன் கையாளகற்றுக்கொள்ள வேண்டும்.
தோல்வி, சகிப்புத்தன்மையை இளைஞர்கள், மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பணி செய்பவர்கள் தொழிலைதாண்டி மனம்விட்டு பேசும் வகையில் நல்ல நண்பர்கள், உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்கொலையை தூண்டும்வகையில் காட்சி அமைப்பதை திரை, நாடக துறையினர் தவிர்க்க வேண்டும்’ என உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT