Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

வருவாய் நிர்வாக ஆணையரகம் உள்ளிட்ட - 3 பிரிவுகளுக்கு பிரத்யேக இணையதளங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

வருவாய் நிர்வாக ஆணையரகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கான இணையதளங்களை நேற்று தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர்.

சென்னை

வருவாய் நிர்வாக ஆணையரகம், துணை ஆட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட மாறுதல் ஆகியவற்றுக்கான பிரத்யேக இணையதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசின் பல்வேறு சமூக பொருளாதாரத் திட்டங்கள் வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப் படுகிறது. பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்களுக்குத் தேவையான பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச் சான்று, இருப்பிடம், வருவாய் ஆகிய சான்றிதழ்களையும் வழங்கிவருகிறது. இத் துறையின் பணியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில். மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்றவை வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் பயன்களை மக்கள் எளிதில் தெரிந்து கொண்டு பயனடைய ஏதுவாக, வருவாய் நிர்வாக ஆணையரகத்தால் ‘www.cra.tn.gov.in’ என்ற பிரத்யேகஇணையதளம் உருவாக்கப்பட் டுள்ளது. இந்த அலுவலகம் சம்பந்தப்பட்ட அரசுத் திட்டங்களின் விவரங்கள் மற்றும் அரசாணைகள், பொதுமக்கள் பயன்பாட்டுக் காக இதில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

அதேபோல், தமிழக அரசின் குடிமைப் பணிகளின் கீழ் பணியாற்றும் அலுவலர்களின் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, துணை ஆட்சியர்களுக் கான ‘https://www.cra.tn.gov.in/tmscs’ என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு விதிகள், சட்டங்கள், அரசால் வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணி மாறுதல் மற்றும் பணி நியமனங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

அடுத்ததாக, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கோட்ட, வட்ட அளவிலான பொது மாறுதல்கள் ஆண்டுதோறும் வருவாய் கோட்டாட்சியர் அளவிலும், மாவட்டஅளவிலான மாறுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து தாமதமின்றியும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையரகத்தால், ‘www.cra.tn.gov.in/vaotransfer’ என்ற இணையதளம் உருவாக் கப்பட்டுள்ளது.

இந்த 3 இணையதளங்களின் செயல்பாட்டையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், இணை ஆணையர் இரா. சீதாலட்சுமி, தேசிய தகவலியல் மைய அலுவலர் சீனிவாச ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x