Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

143-வது பிறந்தநாளை முன்னிட்டு - பெரியார் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை :

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு,அவரது சிலைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 143-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் பெரியார் சிலைக்கும், ஈவெரா சாலையில் மணியம்மை சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பெரியார் திடலில் மரியாதை செலுத்தினர். ‘பெரியார் வாழ்க்கை குறிப்புகள்’, ‘வைக்கம் போராட்டம்’ என்ற தலைப்பில் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட 2 நூல்களை இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

தேனியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பெரியார் படத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவிமரியாதை செலுத்தினார். சென்னைஅண்ணா மேம்பாலம் அருகே பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சத்தியமூர்த்தி பவனில் பெரியார் படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பெரியார் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேமுதிக அலுவலகத்தில் பெரியார் படத்துக்கு பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஆளூர் ஷா நவாஸ் எம்எல்ஏ உள்ளிட்டோரும், அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் தலைமையில் நிர்வாகிகளும், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், கட்சி நிர்வாகிகளும் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

ராமதாஸ், கமல் புகழாரம்

‘பெரியார் வகுத்துக் கொடுத்தபகுத்தறிவுப் பாதையில் பயணித்து மக்களின் மறுமலர்ச்சிக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கும் பாடுபட சமூகநீதி நாளில் உறுதியேற்போம்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

‘ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143. வணக்கத்துடன் நினைவு கூர்கிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x