Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

குறுவை நெல்லுக்கும்பயிர் காப்பீடு வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டுக்கு ரூ.2,327 கோடி செலவில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, நடப்பு குறுவை பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, துவரை,பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், நடப்பு குறுவை பருவத்தில் நெல், தட்டைப்பயறு ஆகியவற்றுக்கு காப்பீடு வழங்கப்படாது என்று அறிவித்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெற்பயிருக்கு காப்பீடு வழங்காமல், பிற பயிர்களுக்கு மட்டும் வழங்குவதால் விவசாயிகளுக்கு பயன் இல்லை.தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடப்பாண்டும் மேட்டூர் அணையில் இருந்துடெல்டா பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கடந்த காலங்களில் இல்லாத வகையில் இப்போது 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளால் எந்த நேரமும் வறட்சியோ, வெள்ளமோ தாக்கக்கூடும் என்பதால், குறுவை நெல்லுக்கு பயிர்க் காப்பீடு அவசியமாகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்விவசாயிகள் தற்கொலை அதிகரித்ததற்கு இதுதான் காரணமாகும். குறுவை நெல் சாகுபடி செய்வதே சூதாட்டமாக மாறிவிட்ட நிலையில், காப்பீடு வழங்குவது மட்டும்தான் விவசாயிகள் மத்தி யில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எனவே, குறுவை நெற்பயிருக்கும், தட்டைப் பயிருக்கும் பயிர்க் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க் காப்பீடுகளுக்கு பிரீமியம்செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பிறகு இரு வாரங்கள் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x