Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

தொண்டர்களை அரவணைத்து அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

கட்சியில் உள்ள சிறு சிறு பிரச்சினைகளை களைந்து, தொண்டர்களை அரவணைத்து அதிமுகவின் வெற்றிக்காக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சூழலில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

அவைத் தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் பங்கேற்றனர். இதுதவிர சமீபத்தில் நியமிக்கப்பட்ட 30 மண்டலங்களின் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 73 நிர்வாக ரீதியிலான மாவட்டங்களின் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இதர அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை 5 மணி அளவில் தொடங்கிய கூட்டம் இரவு 10 மணி வரை நடந்தது.

அதிமுக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘அதிமுக கட்சிவளர்ச்சிப் பணிகள் குறித்தும், சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள்குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டம் குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த நவ.20-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, அதிமுக ஆட்சிக்கு பெண்களின் ஓட்டு முக்கியமான பலம் என்பதால், பெண்களை முன்னிலைப்படுத்தி பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்பணிகள் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும், ‘‘கட்சியில் நிலவும் சிறு சிறு பிரச்சினைகளை முதலில் நிர்வாகிகள் தீர்க்க வேண்டும். தொண்டர்களை அரவணைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். இளம்பெண்கள் பாசறை, இளைஞர்கள் பாசறையில் அதிக அளவில் பெண்கள், இளைஞர்களை சேர்த்து அவர்களுக்கான பணிகளை ஒதுக்கி பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிவாரியாக அதிமுகவுக்கு வாக்களிப்பவர்களை கண்டறிய வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘‘தமிழக தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. வேறு யார் வந்தாலும் நிலைமை மாறாது. திராவிட சித்தாந்த வாக்குகளை நமக்கானதாக மாற்ற வேண்டும். அதிமுக வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய ஆர்.வைத்திலிங்கம், ‘‘கட்சியினர் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். கட்சி தொண்டர்களின் கோரிக்கைகளை நிர்வாகிகள் நிறைவேற்றித் தர வேண்டும்’’ என்றார். தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 30 மண்டல நிர் வாகிகள், அமைச்சர்களுடன் தனித் தனியாக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x